ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான செல்வங்களைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவர். குறிப்பாக இவ்வாறு ஆசைப்படுவோர் அழிந்து போகக்கூடிய செல்வங்களில் ஆசை கொள்வதனை விடுத்து அழியாச் செல்வமான கல்விச் செல்வத்தினை பெறவே ஆசை கொள்ளல் வேண்டும் என்கின்றனர் நமது மூதாதையர்கள். கல்வியானது வெள்ளத்தால் அழியாதது, வெந்தணலால் வேகாது, கள்வர்களால் கொள்ளையிட முடியாதது, கொடுக்க கொடுக்க பொருகுமே தவிர குறையாது.
“கல்வி கரையில் கற்பவர் நாள்சிலமெல்ல நினைக்கிற் பிணிபல.” என்கிறது நாலடியார். சில வாழ்நாட் பல் பிணிச் சிற்றறிவுடைய மாந்தர் கரைதுறையற்ற கல்வியை முற்றாகக் கற்றல் முடியாதென்பது இதன் பொருள். எனினும் பரந்துபட்ட இக்கல்வியில் சிற்றளவையேனும் கற்றுச் சிந்தையிலிருத்தி, அறிவுச் செல்வத்தை சிரத்தையுடன் தேடும்போதே மனித வாழ்வு செழிப்படைகிறது. மனிதன் மனிதனாகின்றான். கல்வியின் மேன்மை பற்றி அன்று தொட்டு இன்று வரை பல நூல்களும் பழமொழிகளும் பறைசாற்றி வருகின்றன.
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்பர். அதாவது, நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணிவேராகத் திகழும். கல்வியின் மேன்மையையும் சிறப்பையும் பற்றி அல்-குர்ஆன் தனது முதல் வசனத்தை “ஓதுவீராக” என்றே ஆரம்பித்துள்ளது. அது மாத்திரமன்றி திருவள்ளுவரும் தனது திருக்குறளில் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதனை அவதானிக்க முடிகின்றது. கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே முகத்தில் கண்கள் இருப்பதாகவும் பேதையருக்கு கண்களிற்குப் பதிலாக முகத்தில் இரு புண்களே உள்ளன என்றும் சிற்றறிவுடையவர்களுக்கு நுட்பமான அறிவு சில வேளைகளில் காணப்பட்டாலும் அதனை அறிவென பெரியார் கொள்ளமாட்டார் எனவும் கல்வி கற்றோரே மனிதர்கள் அன்றி கற்காதோர் விலங்குகளே எனவும் திருவள்ளுவர் கல்வியின் மேன்மை பற்றி வலியுறுத்துகின்றார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வியை அதுவும் இளமைக் கல்வியை பெற்றுக்கொள்ள அல்லல்படும் ஒரு மாணவ சமூகம் பற்றியே இக்கட்டுரை பிரதிபலிக்கின்றது. இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு பிற்பாடு கல்வியை பெற்றுக்கொள்வதில் பொதுவாக எல்லோருமே ஆர்வம் காட்டுவதனை அவதானிக்கின்றோம். தற்போதைய சூழலில் அவற்றுக்கான வழிகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் யுத்த காலங்களில் கண்ட காட்சிகளை காண்பது போலவே திருகோணமலை மாவட்டம், குச்சவெளி கோட்டக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட இலந்தைக்குள பாடசாலையை அவதானிக்க கிடைக்கின்றது.
குச்சவெளி, சல்லிமுனை பல்வக்கை குள பிரதேசத்தில் அமைந்துள்ள இலந்தைக்குள வித்தியாலயம் 2009.01.07ஆம் திகதி மீளத் திறக்கப்பட்டது. பாடசாலை. இப்பாடசாலை அமையப்பெற்றுள்ள கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 260க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்திலே மேற்சொன்ன பாடசாலை அமையப்பெற்றுள்ளது.
இப்பாடசாலை மாணவர்கள் வைக்கோலால் வேயப்பட்ட தற்காலிக கொட்டில்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலான புகைப்படங்கள் முகநூலில் பதிவேற்றப்பட்டுள்ளன. முகநூல் நண்பர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை இப் புகைப்படங்கள் தோற்றுவித்துள்ளன. எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற ஒரு நிலையில் இயங்குகின்ற இப்பாடசாலை யுத்த காலங்களை நினைவூட்டுவதாகவே உள்ளது.
இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என். விஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்பாடசாலைக்கான காணி உரித்து தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதனால் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதில் தடைகள் உள்ளதாக குறிப்பிடுகின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், எனவே அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரினால் பாடசாலைக்குரிய நிர்மாண வேலைகளை குறித்த காணியில் மேற்கொள்ள முடியும் என எழுத்துமூலம் கிடைக்கப்பெற்றது. அச்சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் போன்றன ஏற்படுத்தப்பட்டன. பின்னர் நிர்மாண நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரப்பட்டு அறிவிக்கப்பட்டது.
குறித்த காணியில் சர்சை இருப்பதாக அறிகின்றோம். சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அதற்கான பூரண அனுமதி கிடைக்கப்பெறுமிடத்து எம்மால் நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணிக்க முடியும் என்கின்றனர். குச்சவெளி இலந்தைக்குள பாடசாலையில் 160 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்ற நிலையில் தற்போது 100 மாணவர்கள் கல்விகற்கின்றனர். பாடசாலை அதிபருடன் மொத்தமாக 07 ஆசிரியர்கள் கடமையாற்றி வந்தனர்.
இவ்வாண்டில் 02 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுள்ளதால் தற்போது 05 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர். இப்பாடசாலை தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்கள் கற்கும் ஆரம்பப் பாடசாலை. தரம் 05 க்கு மேற்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்வதற்காக இங்குள்ள மாணவர்கள் 06 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள குச்சவெளி அல்-நூரியா பாடசாலைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் இலந்தைக்குள பாடசாலை அதிபர் ஏ.ஏ.சி. புனீஸை தொடர்பு கொண்டபோது பல வரலாற்று தகவல்களை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
யுத்த காலங்களில் அங்குமிங்கும் இயங்கிய இப்பாடசாலை யுத்தம் முடிவுறப்போகும் தறுவாயில் 2009.01.07ஆம் திகதி சல்லிமுனை பல்வக்கை குளம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லீட்ஸ் நிறுவனத்தினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீட்டுத்தொகுதியில் உள்ள சனசமூக கட்டடத்திலே இப்பாடசாலை தற்காலிகமாக திறக்கப்பட்டதாகவும், சிறிது காலத்தின் பின்னர் நிரந்தரக் காணி அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் தற்காலிக கொட்டில்களில் இப்பாடாலையை நடாத்திவருவதாக குறிப்பிடுகின்றார் பாடசாலை அதிபர்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இப் பாடசாலைக் காணிக்கான அனுமதி வழங்கப்பட்டது. மேலும் காணி ஆணையாளரின் அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஒருசில சக்திகள் எமது பாடசாலை காணி விடயத்தில் சிக்கல் நிலையை ஏற்படுத்துவதனை அனுமதிக்க முடியாது. இவ்வாறான நிலையை இங்குள்ள அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன் அதற்கான தீர்வினை பெற்றுத்தருவார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டு ஒரு (01) மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாகவும், 2016 ஆம் ஆண்டு மூன்று மாணவர்கள் 148, 146, 144 என்கின்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். 100 புள்ளிகளுக்கு மேல் 07 மாணவர்கள் பெற்றதுடன், 70 புள்ளிகளை 48 வீதமானவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடுவதுடன். குச்சவெளிக் கோட்டத்தில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் 01 ஆம் 02 ஆம் இடங்களை இப்பாடசாலை பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றார். இவ்வாறான பல வழிகளிலும் திறமையான மாணவர்களை கொண்டுள்ள இப்பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பது எண்ணிலடங் காதவை.
நவீனங்கள் நிரம்பிவழிகின்ற ஒரு காலத்தில் வாழ்கின்றோம். அநேகமாக பாடசாலைகளிலுள்ள வகுப்பறைகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களிலுள்ள வகுப்பறைகளில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் வெந்தணலில் தனது கல்வியை கற்றுக்கொள்கின்ற ஒரு நிலையை இலந்தைக்குள வித்தியால மாணவர்கள் அனுபவிப்பதனை அவதானிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.
குச்சவெளி, இலந்தைக்குள பாடசாலை விவகாரம் தொடர்பில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரை தொடர்பு கொண்டபோது இப்பாடசாலை அமையப்பெற்றுள்ள காணியில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது. தனியார் ஒருவர் இக்காணிக்கு உரிமம் கோருகின்றார்.
பாடசாலை புல்மோட்டை
குச்சவெளி, இலந்தைக்குள பாடசாலை விவகாரம் தொடர்பில், திருகோணமலை மாவட்டத்தைச் சேரந்த, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரை தொடர்பு கொண்டபோது இப்பாடசாலை அமையப்பெற்றுள்ள காணியில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி, இலந்தைக்குள பாடசாலை விவகாரம் தொடர்பில், திருகோணமலை மாவட்டத்தைச் சேரந்த, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரை தொடர்பு கொண்டபோது இப்பாடசாலை அமையப்பெற்றுள்ள காணியில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தனியார் ஒருவர் இக்காணிக்கு உரிமம் கோருகின்றார். பாடசாலை புல்மோட்டை – திருகோணமலை பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ளது. பிறிதொரு இடத்தில் இப்பாடசாலையை நிர்மாணிக்கவும் முடியாதுள்ளது. இப்பாடசாலை அமையப்பெற்றுள்ள சூழலிலே மக்கள் வாழ்கின்றனர். ஆகவே அரசாங்க அதிபர், இங்குள்ள அரச உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இவ்விடயத்தை தான் முன்னின்று வெற்றிகொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், முதற்கட்டமாக தனது பாதீட்டு நிதி ஊடாக தளபாட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரிசிமலை விவகாரத்தினை தனியொருவனாக ஆறு வருடங்கள் போராடி மீட்டுக் கொடுத்துள்ளேன். அதற்காக அல்லஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிக்கொள்ளும் அன்வர், இவ்விடயத்தையும் மிகச் சுலபமாக மீட்க முடியும் என நம்புவதாக குறிப்பிடுகின்றார்.உண்மைதான் மாகாண சபை உறுப்பினர் ஒரு இளைஞர், மிகத் துடிப்பானவர், முஸ்லிம் அரசியலில் பலரைப்பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் பெருக் கெடுக்கும் வேளையில், சமூகத்துக்காய் பணியாற்றுவதில் தயக்கம் காட்டாத ஒருவர்.
இலந்தைக்குள அதிபருடைய பேச்சிலும் அதுவே வெளிப்பட்டது. மாகாண சபை உறுப்பினர் அன்வர், இவ்விடயத் தில் சோர்வில்லாது தம்முடன் இணைந்து பணியாற்றுவதாக குறிப்பிடுகின்றார்.பொதுவாக இப்பாடசாலையினுடைய ஒட்டுமொத்த அவலங்களுக்கும் காரணம் காணி தொடர்பான சட்டமூலங்களும், மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் பூரணமாக வழங்கப்படாமையுமே. நல்லாட்சி அரசு பதவியேற்புக்கு இவ்வாறான விடயங்களையே காட்சிப்டுத்தியது. ஆனால் தற்போதைய போக்கினை அவதானிக்கும் போது புரிந்துகொள்வது, கடந்த அரசாங்கத்துடன் கொண்டிருந்த கோபத்தை தீர்த்தீர்களே தவிர, எங்களது வாக்குறுதிகளுக்காக வாக்களிக்கவில்லை. வாக்குறுதிகளை நீங்களாக கற்பனை செய்துகொண்டீர்கள் என்று சொல்வதனைப்போல் ஆட்சியாளர்களுடைய மௌனம் பதிலளிக்கின்றது.
ஆக, முஸ்லிம் முதலமைச்சர் அமர்ந்திருக்கின்ற கிழக்கு மாகாணத்தில், அடிப்படையில் ஒரு கல்வி நிலை அதிகாரியாக புடம்போடப்பட்டவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர். இவ்வாறானவர்கள் வீற்றிருக்கும் ஒரு சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இவ்வாறான ஒரு பாடசாலையை என்னவென்று சொல்வது. உலகில் அழிந்துபோகும் செல்வங்களை அடைய எடுக்கும் முயற்சிகள் எண்ணிலடங்காதவை. அவ்வாறானவற்றை நுகர்வதற்கு ஆயுளில் அரைவாசியை கழிக்கின்றோம். அவற்றால் இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அதிகம். ஆனால் மேன்மை தரக்கூடிய ஒரு விடயத்துக்கு பொருளாதாரத்தினையும், ஆற்றலையும் நம்மில் எத்தனை பேர் செலவிடுகின்றோம்.
தொடர்ந்து இவ்வாறான அவலங்களுடன் இலந்தைக்குள பாடசாலை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதனை அனுமதிப்பது என்பது அடிப்படை உரிமை மீறலாகவே பார்க்கப்படும்.எனவே, மேற்படி பாடசாலை விடயத்தில் கிழக்கு மாகாணசபை விரைந்து நடவடிக்கை எடுப்பதே இப்போதைக்குள்ள தேவை. அவ்வா றான முயற்சிகளை மேற்கொள்வோரே ஒளவையார் சொன்ன மன்னனுக்கு ஒப்பானவர்கள்.
றிசாத் ஏ காதர்