முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சுப் பதவிகளில் இருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தரும்படி மன்றாடியும் அவர்கள் அதில் அக்கறை கொள்ளவில்லை.
எனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உடனடித் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் 17 பேரும் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவருக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பள்ளிவாசல் நிர்வாக சபையின் உப செயலாளர் எஸ்.எச்.எம். ரவூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் 'விடிவெள்ளி'க்கு கருத்து தெரிவிக்கையில்...
‘மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் பள்ளிவாசலை இடம்மாற்றிக் கொள்வதற்கு 1 ½ ஏக்கர் காணி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டும் பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்துவிட்டது என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவலாகும். பள்ளிவாசலுக்கு காணி தருவதாக எவரும் கூறவில்லை.
என்றாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நகர அபிவிருத்தி அதிகாரசபை பள்ளிவாசலுக்கு காணி தருவதாக கூறியது. ஆனால் எவ்வளவு காணி தரப்படும் எனக் கூறவில்லை. பள்ளிவாசலை தூர ஓர் இடத்துக்கு இடம் மாற்றினால் பிரச்சினைகள் ஏற்படும் என்ற வகையிலே கடந்த காலங்களில் பள்ளிவாசலை நாம் இடம் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை.
தற்போது இன நல்லிணக்கம் கருதியே பள்ளிவாசலை இடம் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளோம். அண்மையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை காணியொன்றினை எமக்குக் காண்பித்தது.
என்றாலும் அக்காணிக்கருகில் மதுபானசாலை அமைந்திருப்பதால் அக்காணிக்கு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன் பள்ளிவாசலுக்கு பொருத்தமான மாற்றுக் காணியொன்று வழங்குமாறே கோரிக்கை விடுத்துள்ளோம்.
முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக, தீர்வு பெற்றுத்தர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.