Latest News
    Post views-

    ஜனாதிபதித் தேர்தலில் “கம்பியூட்டர் ஜில்மார்ட்” இடம்பெறுமா? தேர்தல் ஆணையாளருடன் நேர்காணல்

    (வேறு தளம் நேர்காணல் போது கேட்கப்பட்ட கேள்வி அரங்கம் தனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றது)



    நேர்காணல் – எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி 


    கேள்வி –
    நாட்டிலுள்ள பிரஜைகள் ஒவ்வொருவரும் வாக்குரிமையை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா?
    பதில் –
    இலங்கைக்கு சர்வஜ வாக்குரிமை 1931 ஆம் ஆண்டு கிடைத்தது. இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்த முற்படும் போது முழு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா கண்டத்திலும் நியுசிலாந்தில் மாத்திரம் தான் சர்வஜன வாக்குரிமை அந்தஸ்து கிடைத்தது. இலங்கையை ஆண்டு கொண்டிருந்த பிரித்தானியாவில் கூட இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1928 ஆம் ஆண்டு தான் இந்த உரிமை கிடைக்கப்பெற்றது. இந்த வகையில் இலங்கை சர்வஜன வாக்குரிமையில் ஒரு முன்னோடி நாடாக காணப்படுகின்றது.
    தற்பொழுதும் கூட இலங்கையில் முன்னோடிச் சட்டமான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரையில் இதைப்பற்றிக் கூறப்படுகின்றது. இறைமை மக்களுக்குரியது. இது இன்னொருவருக்குக் கையளிக்கப்பட முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது.
    இந்த இறைமை மூன்று விடயங்களில் பிரயோகிக்கப்பட முடியும்.அதில்,
    1. ஆட்சி அதிகாரம்
    2. வாக்குரிமை
    3. அடிப்படை உரிமை
    இதில் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் எமது நாட்டில் மூன்று துறைகள் காணப்படுகின்றன.
    1. நிறைவேற்றுத் துறை
    2. சட்டவாக்கத் துறை
    3. நீதித் துறை
    இதில் நிறைவேற்றுத் துறை என்பது ஜனாதிபதியையும்,  அமைச்சரவையையும், அரசாங்க அதிகாரிகளையும் குறிக்கும். நிறைவேற்றுத் துறையில் ஜனாதிபதியும், அமைச்சரவையும் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றது.
    சட்டத்துறையைப் பொறுத்தவரையிலும் 100 வீதம் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றது. நீதித்துறை மாத்திரமே வாக்குரிமையுடன் தொடர்புபடாத ஒரு துறையாக காணப்படுகின்றது.
    இறைமை பிரயோகிக்கப்படும் இரண்டாவது துறையான வாக்குரிமையை எடுத்துக் கொண்டால், தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளைச் தெரிவு செய்து தங்களது உரிமையை அனுபவிக்கின்றார்கள். இதற்கு மேலதிகமாக இலங்கையில் சட்டத்தில், மக்களுக்கு சட்டம் இயற்ற முடியும் என்ற ஒரு விடயம் உள்ளது.  மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பில் சட்டவாக்கத்தை மேற்கொள்ள முடியும். ஒரு விடயம் தொடர்பில் சார்பாகவோ, எதிராகவோ வாக்களிப்பதன் மூலம் சட்டவாக்கத்தையும் மக்களால் மேற்கொள்ள முடியும்.
    இலங்கையில் வாக்குரிமை மிக முக்கியமான ஒன்று. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜையான, ஒவ்வோர் ஆண்டும் ஜுன் மாதம் 01 ஆம் திகதி ஒருவர் எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். சாதாரண வதிவாளர் என்பது ஒன்றில் நிரந்தர வதிவாளராகவோ அல்லது தற்காலிக வதிவாளராகவோ வசிப்பவராக இருத்தல்  வேண்டும். இவ்வாரானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்வதன் மூலம் வாக்குரிமையைப் பெறுகின்றார்கள்.
    இந்த தகைமையைப் பெற்றிருந்தாலும் தேர்தல் ஒன்று வரும்போது அவர் வாக்களிப்பதன் மூலம் தான் அவரது உரிமை முழுமை பெறும். வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தும் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தால், மேலே கூறிய அனைத்தையும் இவரால் அடைந்துகொள்ள முடியாமல் போகும். சந்தர்ப்பத்தை தவறவிட்ட ஒருவராக இவர் காணப்படுவார்.
    இலங்கையிலுள்ள சட்டத்தில் ஒரு பெரும் குறைபாடு உள்ளது. வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதும் அல்லது ஒருவருக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுப்பதும் கட்டயக் கடமையாக இருந்தாலும், அவ்வாறு வாக்குரிமையைப் பெற்றுள்ள ஒருவர் வாக்களிப்பது கட்டாயம் என்பது இலங்கை சட்டத்தில் இல்லை.
    இதனால், பெரும்பாலானவர்கள் வாக்களித்தாலும் ஒன்று, அளிக்காவிட்டாலும் ஒன்று, அது என்னுடைய முடிவு என இருந்து விடுகின்றார்கள். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாக்களிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும். அதற்காக தண்டப் பணமும் அறவிடப்படுகின்றது. இந்த நிலைமை இலங்கையில் இல்லாததைப் பயன்படுத்தி பலர் வாக்களிக்காது இருந்து விடுகின்றனர். இதனால், இவர்கள் இலங்கை ஆட்சியில் பங்காளர்களாக ஆகவேண்டிய அரிய வாய்ப்பையும் இழந்து விடுகின்றனர்.
    கேள்வி –
    வாக்காளர் அட்டை வைத்திருப்பவரும், தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்வது கட்டாயமானதா?
    பதில் –
    இலங்கையில் தற்பொழுதுள்ள 2004 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 14 ஆம் இலக்க தேர்தல்கள் சிறப்பேற்பாடுகள் திருத்தச் சட்டத்தின் ஊடாக வாக்களிக்கச் செல்கின்ற ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆள் அடையாளத்தை செல்லுபடியான ஆள் அடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்ற சட்டம் வந்தது.
    அதன் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் அனைத்து தகைமையுள்ள வாக்காளர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு முடிந்து விட்டது என்ற சான்றிதழை தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும் என அந்த தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒரு குறித்த தினமாகின்றபோது நாடெங்கிலுமுள்ள தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு தகைமையுளடைய எல்லோருக்கும் உறுதிப்பாட்டை வழங்க முடியாது.
    இப்படியான நிலையில் இந்த சட்ட ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் தேர்தல்கள் திணைக்களம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. இதன்போது உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்து, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேர்தல்கள் ஆணையாளருக்கு சில மாற்று அடையாள அட்டைகளை பயன்படுத்த அனுமதி கோரியது. இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்பின்னர் 2008 ஆண்டிலிருந்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய அடையாள அட்டை,  செல்லுபடியான கடவுச் சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் மதகுருமாறுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை, அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வுதிய அடையாள அட்டை ஆகியவற்றை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுக்கொண்டது.
    இந்த எந்தவொரு அடையாள அட்டைகளும் இல்லாதவர்கள், தற்பொழுது 3 ஆம் திகதி வரை கிராம அலுவலரைச் சந்தித்து இரு புகைப்படங்களை கொடுத்து அவரினுாடாக விண்ணப்பித்தால் தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற விசேட அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
    அடையாள அட்டை இருந்தும், எழுத்துக்கள், புகைப்படங்கள் என்பன தெளிவில்லாதவர்களும் இவ்வாறு புகைப்படத்தைக் கொடுத்து தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது சிறந்தது. தெளிவில்லாத அடையாள அட்டையுள்ளவர்களுக்கு வாக்குச் சீட்டு வழங்காமல் இருக்க வாக்களிப்பு நிலைய அதிகாரிக்கு உரிமையுண்டு.
    கேள்வி –
    ஆள் அடையாள அட்டையுடன் முகத்தையும் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சட்ட ரீதியில் உள்ளது. இதனால், நிகாப் அணியும் முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானவர்கள், வாக்களிக்கச் செல்வதில்லை. இவர்களுக்கு முகத்தைக் காட்டாமல் இருக்க சலுகையுள்ளதா?
    பதில் –
    முஸ்லிம் பெண்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கல் நிலைபற்றி தேர்தல்கள் திணைக்களம் கருத்தில் எடுத்தது. தற்போதுள்ள தேர்தல்கள் ஆணையாளர் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய மிகுந்த அக்கரையுடன் செயற்படும் ஒருவர். இது அந்தந்த வாக்காளருக்குள்ள உரிமை. அதேவேளை, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே வாக்குச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
    இதனைக் கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் உள்ளன. எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் பெண் உறுப்பினர் ஒருவர் இல்லாமல் இல்லை. வெளிநாடு செல்கின்ற பெண்கள் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு முகத்தைத் திறந்து காட்டுகின்றனர். இவை அனைத்தும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் இடம்பெறும் நிகழ்வு.
    இதனை அடிப்படையாக வைத்து தமது வாக்குரிமையைத் தாரைவார்க்காமல், நிகாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்திலுள்ள பெண்களிடம் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
    கேள்வி –
    அரசாங்கத் தகவல் திணைக்களத்தினுாடாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகள் வெளிவராது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து கூற முடியுமா?

    பதில் -
    இம்முறை அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக தேர்தல் முடிவுகள் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை.  இதற்குப் பகரமாக ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் இரகசிய இலக்கத்தின் வாயிலாக உடனுக்குடன் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் தேர்தல் திணைக்களத்தின் முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கான ஒரு வழிமுறையாக  அரசாங்கத் தகவல் திணைக்களம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

    இம்முறை தேர்தல் முடிவுகள் முதலில் தேர்தல் திணைக்களத்தின் கணனி முறைமைக்கு உட்படுத்தப்படும். முடிவுகளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு தொகை கொடுப்பனவை திணைக்களத்துக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் நிறுவனங்களுக்கு திணைக்களம் ஒரு இரகசிய இலக்கமொன்றை வழங்கும். அதனுாடாக இந்த முடிவுகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த முறைமையின் மூலம் ஊடக நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் பெறுபேறுகள் கிடைக்கக் கூடிய அவகாசம் இருக்கின்றது.

    தகவல் திணைக்களத்துக்குச் சென்று ஊடகங்களுக்குச் செல்லும் போது கால தாமதம் இடம்பெறுவதனால் ஊடகங்கள் அதனை ஒரு தடையாக கருதுகின்றார்கள். தேர்தல்கள் திணைக்களம் ஒரு முடிவை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், முதலாவது அந்த மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு, அந்த மாவட்டத்தில் அறிவிப்பதற்கு அந்த முடிவு கொடுக்கப்படும். பின்னர் மூன்று நிமிடங்கள் கழிந்ததும் அது அரசாங்கத் தகவல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டது. இவ்வாரே தேர்தல் முடிவுகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.  இந்த முறைமையில் பல சிக்கல்கள் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. இதன் அர்த்தம் அந்த முடிவுகளில் குளறுபடிகள் என்பது அல்ல. அவ்வாறு சொல்வது பிழையானது.

    கேள்வி –
    தேர்தலில் கம்பியுட்டர் ஜில்மார்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இது பற்றி,

    பதில் –
    கம்பியுட்டர் ஜில்மார்ட் என்பது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இந்தச் சொல் தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒரு விதத்தில் நன்மையாக காணப்பட்டது எனலாம். அதாவது, தேர்தல் நடைமுறை குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு ஒரு வாய்ப்பை இந்த சொல் ஏற்படுத்தியது.

    ஒரு தேர்தல் முடிவை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட 12ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கென ஒரு வாக்கு எண்ணல் நிலையம் ஒதுக்கப்படும். இம்முறை 1100 அளவிலாள சாதார வாக்குச் சீட்டுக்களை எண்ணும் வாக்கு எண்ணும் நிலையங்களும், சுமார் 350 தபால் வாக்கு எண்ணும் நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.
    ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திலும் பிரதம வாக்கெண்ணல் அதிகாரி ஒருவர் இருப்பார். அவருக்கு உதவுவதற்காக அதே மாவட்டத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்கள் 40 பேர் இருப்பார்கள். இவர்கள் அப்பொழுது தான் சிலவேளை சந்திப்பவர்களாக இருப்பர்.

    இவர்கள் அந்த இடத்திலேயே வாக்கு எண்ணும் பணிகளை பார்ப்பதற்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு அறைக்கு ஐந்துபேர் வீதம் நியமிக்கலாம். இவர்கள் அருகில் இருந்து அதனை அவதானிக்கலாம். அங்கு எண்ணும் போது எந்தவிதமான தவறுகளையும் செய்ய முடியாது. அங்குள்ள அதிகாரிகளும் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.
    இறுதியாக வாக்கெண்ணல் முடிந்த பின்னர் தயாரிக்கப்படும் பெறுபேற்று அறிக்கை ஆறு பிரதிகள் கொண்ட காபன் தாள்களில் அது பதியப்படும். பிறகு அதனைச் சரிபார்ப்பார்கள். பின்னர் மீளச் சரிபார்ப்பார்கள். எழுமாற்றுப் பரிசீலனை, அதனை அடுத்து அதியுயர் பரிசீலனை என சரிபார்க்கப்படும். இந்த அனைத்தும் முடிந்த பின்னர் தான் காபன் தாளில் பதியப்படும்.

    எழுதப்பட்ட ஆறு தாள்களில்,  ஒரு தாள்தான் பெறுபேறு தயாரிக்கப்படும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அடுத்த மூன்று தாள்கள் அதிகூடுதலான வாக்குகள் பெற்ற மூவருக்கு வழங்கப்படும். மற்றது வாக்கு எண்ணும் நிலையத்தில் பார்வைக்கு ஒட்டப்படும். ஆறாவது பிரதி அவருடைய குறித்த வாக்கு எண்ணும் அலுவலருடைய ஜேர்னலுடன் இணைக்கப்படும்.
    இதனை அங்கு எடுத்துச் செல்லும் பொழுது, வாக்கெண்ணும் நிலையம் அமையப்பெற்றுள்ள கட்டிடத் தொகுதியிலேயே தான் பெரும்பாலும் பெறுபேறு வெளியிடும் நிலையமும் இருக்கும். அந்த இடத்திலும் முகவர்கள் இருப்பார்கள். இவர் இங்கிருந்து கொண்டு செல்லும் சீட்டு பதியப்படுவதைப் பார்ப்பதற்கு ஒரு வேட்பாளருக்கு இருவர் அங்கு இருப்பார்கள்.

    இங்குள்ள பெறுபேறுகள் நிலையத்திலும் கையாளும் கூட்டுவார்கள். கணனியிலும் கூட்டுவார்கள். அதுமட்டுமல்ல பெறுபேற்று அட்டவணை கிடைத்தவுடன் தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்புவார்கள். தேர்தல்கள் செயலகத்திலும் கையாலும் கூட்டப்படும். கணனியிலும் கூட்டப்படும். அனைத்து முடிவுகளையும் பார்த்து விட்டுத் தான் தேர்தல்கள் ஆணையாளர் கையொப்பமிட்டு முடிவை அறிவிப்பார். இந்த முடிவு எந்த இடத்திலும் மாற்றப்பட முடியாது. முடிவுகளில் மாற்றம் வருவதாக கூறுவது எந்த வகையிலும் சாத்திமற்றது.

    கேள்வி –
    ஒரு தேர்தல் எப்போது ரத்து செய்யப்படும்?

    பதில் –

    தேர்தல் ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடம் தாமதமானாலும் தேர்தல் ரத்தாகும். அதேவேளை, உரிய நேரத்துக்கு பின்னர் தாமதமானாலும் ரத்தாகும் என்பது தான் இலங்கையில் சட்டம். ஆனால், உரிய நேரத்துக்கு ஆரம்பித்து உரிய நேரத்தில் முடிந்தாலும், இடையில் இருக்கின்ற நேரத்தில் குளர்படிகள் செய்து வாக்குச் சீட்டுக்களைப் பறித்து பலாத்காரமாக நுழைத்தாலும் ரத்து செய்வதற்கு சட்டத்தில் எதுவும் சொல்லப்பட்டிருக்க வில்லை. டாக்டர் அர்ஜுன பாராக்கிரம தொடுத்த வழக்கின் காரணமாக இதற்கான சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் கூட தேர்தலை ரத்தாக்குவதற்கு ஒரு நிபந்தனையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் நடைபெறும் நேரத்திற்குள் தொடர்ச்சி அறுபட்டால் தேர்தல் ரத்தாகும். தொடர்ச்சி அறுபடுவதற்கு பின்வரும் சந்தர்ப்பங்கள் கூறப்படும்.

    இடையில் யாராவது வந்து வாக்குச் சீட்டுக்களைப் பறித்து பலாத்காரமாக வாக்களித்தால், வாக்களிக்க வந்துள்ள வாக்காளர்களை விரட்டியடித்தால் தொடர்ச்சி பாதிக்கப்படும், வாக்காளிப்பு நிலையத்திலுள்ள முகவர்கள் விரட்டப்பட்டால், வாக்களிப்பு நிலையத்துக்கு வரவேண்டிய வாக்காளர்கள் எங்காவது தடுத்து நிறுத்தப்பட்டால், வாக்களிப்பு நிலையத்திலுள்ள அலுவலர்களினால் கட்டுப்படுத்த முடியாத சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வாக்களிப்பு நிலையத்திலுள்ள பணியாளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு வர முடியாது போனால் தேர்தலின் தொடர்ச்சி பாதிக்கப்படும். இந்த எந்தவொரு நிகழ்வு நடைபெற்றாலும் தேர்தலை ரத்து செய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் இருக்கின்றது. அவ்வாறு ரத்து செய்யப்படும் தொகுதியின் வாக்களிப்பை வேறு ஒரு தினத்தில் நடாத்த தேர்தல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.
    நன்றி:டெய்லி சிலோன்
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்