வேலையற்ற நிலையில் இருந்து வரும் கிழக்கு மாகாண பட்டதாரிகள் விடயத்தில் முதலமைச்சரின் இடைவிடாத முயற்சியை தாம் வெகுவாகப் பாராட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை (01.03.2017) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பிரதமரின் செயலகத்தில் இருந்தவாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும் முதலமைச்சின் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்துடன் செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கினர்.
மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் விடயத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் சுமார் 5000 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு சாதகமான தீர்வுக்காக நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.
இது பாராட்டப்பட வேண்டிய விடயம்.அத்துடன் கிழக்கில் கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினையில் கல்வி அமைச்சுக்கு நேரடியாகச் சென்று பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும் வரை அமைச்சிலிருந்து நகர்ந்து செல்ல மாட்டேன் என்று போராடி தீர்வினைப் பெற்றுக்கொடுத்த முதலமைச்சரின் செயற்திறனை இவ்விடத்தில் நினைவூட்ட வேண்டியுள்ளது.
எனவே கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என்பது குறித்து முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்புக்களில் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற ஒரு கொள்கைத் தீர்மானத்தையும் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் கொண்டு வரவேண்டும் என்பதையும் சிவில் சமூகம் எதிர்பார்ப்பதாக மாமாங்கராஜா மேலும் தெரிவித்தார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்