இறக்காமம் வாங்காமம் பகுதியில் கடந்த புதன்கிழமை(05.04.2017) வழங்கப்பட்ட அன்னதானம் சிலருக்கு நஞ்சாகியதால் அவர்களில் பெருமளவிலானவர்கள் இறக்காமம் வைத்தியசாலையையும், ஏனைய சிலர் அம்பாறை பொது வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையையும் நாடியிருந்தனர்.
வியாழக்கிழமை(06.04.2017) மதியத்தின் பின்னரே அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலைகளை குறிப்பாக இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை நாடினர். அதன் காரணமாக வியாழக்கிழமை பின்னேரத்திலிருந்து கல்முனை சுகாதார பிராந்தியத்தைச் சேர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்களுடனான அம்பியுலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தேவையான சந்தர்ப்பங்களில் நோயளர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் மாற்றப்பட்டிருந்தனர்.
மறுநாள் வெள்ளிக்கிழமையும்(07.04.2017) இதேமாதிரியான முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளர்களில் அம்பாறை வைத்தியசாலையில் இருவரும், சம்மாந்துறை வைத்தியசாலையில் ஒருவருமாக மூவர் மரணமாகியிருந்தனர்.
குறித்த இரண்டு நாட்களும் சிகிச்சை வழங்குவதில் மருதமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, தீகவாபி மற்றும் மத்தியமுகாம் பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் அஷ்ரப் ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள் பிராந்திய பணிமனையைச் சேர்ந்த விஷேட பிரிவுகளுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரிகள் குறிப்பாக வெள்ளிகக்கிழமை நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தும் இவர்கள் மக்களின் நலன்கருதி இறக்காமம் வைத்தியசாலையில் தமது பணிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்பதற்கு பொதுமக்களே சான்றாகும்.
இந்த நடவடிக்கைகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமை தாங்கி முன்னெடுத்து வருகின்றார். அவருக்கு பக்கபலமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைப் பிராந்தியக் கிளையும் செயற்பட்டு வருகின்றது. தற்பொழுதும் இதேவிதமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதோடு சனிக்கிழமையும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை இவ்வாறிருக்க, சில ஊடகவியலாளர்களும், செய்தி ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கி வைத்தியர்கள் மீது பிழையான கண்ணோட்டத்தை ஏற்படுத்த விழைவது நன்றுமல்ல, ஏற்புடையதுமல்ல.
வைத்தியர்கள் அங்கு வரவில்லை என்றால் ஏறக்குறைய 600 இற்கு மேற்பட்ட நோயாளர்களுக்கு அங்கே சிகிச்சை வழங்கியது யார் என்பதும், வைத்தியர்கள் இல்லாத ஏனைய வைத்தியசாலைகளுக்கா நோயளர்களை இடமாற்றினார்கள் என்பதும் வேடிக்கையாக இருக்கின்றது. இறக்காமம் வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி யார் என்பது கூடத்தெரியாமல் செய்தி வழங்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
மேலும், உணவு நஞ்சானதற்கான உடனடிக்காரணம் எதுவும் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், நோயளர்களின் வாந்தி மற்றும் மல மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
டாக்டர் என். ஆரிப்
பொறுப்பு வைத்திய அதிகாரி
கல்முனை பிராந்திய தொற்றுநோய்ப் பிரிவு