எம்.ஜே.எம்.சஜீத்
கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை 3தனிநபர் பிரேரணைகளை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதிகமான மக்கள் வாழும் கிண்ணியா பிரதேசத்தின் சுகாதாரத் தேவைகள் கருதி குறைந்த வளங்களுடன் காணப்படும் கிண்ணியா தளவைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சுக்கு கையளித்து அவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றினையும், மூவின மக்களும் செறிந்து வாழும் மூதூர் பிரதேசத்தில் அம்மக்களின் நன்மை கருதி மூதூர் தளவைத்தியசாலையை டீ தரத்திலிருந்து யு தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மூதூர் தள வைத்தியசாலையை டீ தரத்திலிருந்து யு தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தக் கோரியும் தனிநபர் பிரேரணை ஒன்றினையும் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்வி நலன் கருதி அப்பாடசாலைக்கு புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறு கோரியும் தனிநபர் பிரேரணை ஒன்றினையும் சமர்ப்பித்து எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.