காத்தான்குடி பொது மைதானத்தினை புனரமைப்பு செய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக சுமார் இருபது இலட்சம் (2,000,000.00) ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு புனரமைப்பு பணிகள் பூரனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2017.02.26ஆந்திகதி-ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வானது காத்தான்குடி நகரசபையின் செயலாளர் S.M.M. ஸபி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதோடு, இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் அல்ஹாபிழ் Z.A. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்துகொண்டு உத்தியோக பூர்வமாக மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளனர்.
அத்தோடு, இந்நிகழ்வை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் தலை சிறந்த அணிகளுக்கிடையிலான மின்னொளி உதைப்பந்தாட்ட கண்காட்சிப் போட்டிகளும் இன்று மாலை 5 மணி முதல் நடைபெறவுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு பொது மைதானமான இம்மைதானமானது கடந்த கால அரசாங்கத்தின் போது ஜனாதிபதி வேற்பாளரான மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக கனரக வாகனங்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு முறையாற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமைனால் மைதானம் முற்றாக சேதமடைந்து குன்றும் குழியுமாக பாவனைக்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூடி வைக்கப்பட்டிருந்த இம்மைத்தானத்தினை புனரமைப்பு செய்து மீள் பாவனைக்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இருபது இலட்சம் (2,000,000.00) ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் புனரமைப்பு பணிகளுக்கான விலைமனுக் கோரப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இப்புனரமைப்புப் பணிகள் பூரனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.