(க.கிஷாந்தன்)
நுவரெலியா சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட அக்கரப்பத்தனை, லிந்துலை, டயகம போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இப்பகுதியில் அதிகமான நோயாளர்கள் தோட்டப்புறங்களிலிருந்து வருவதால் அதிகாலை நேரங்களில் வைத்தியசாலைக்கு வருகின்றனர். இவர்கள் பல நேரம் வைத்திய பரிசோதனைக்காக வரிசையில் காத்திருப்பதோடு பரிசோதனையின் பின் வைத்தியர்களால் நோயளர்களுக்கு மருந்துகளை பாமசிகளில் பெற்றுக்கொள்ளுமாறு மருந்து சிட்டுகள் வழங்கப்படுகின்றது.
நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வரும் பொழுது அதிகமான பணம் கொண்டு வருவதில்லை. இதனால் வைத்தியர்களால் கூறப்பட்ட மருந்துகளை பாமசிகளில் நோயளர்கள் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நோயளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் குளவி கொட்டுக்கிழக்காகும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்ற போதிலும் இவ் வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத காரணத்தினால் வெளி மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைக்கு நோயளர்களை இடமாற்றம் செய்கின்றனர்.
இதனால் சம்மந்தப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் போக்குவரத்துக்கும் தனியார் பாமசிகளில் மருந்துகளை பெறுவதில் பல சிரமங்களை இவர்கள் எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு மருந்து சிட்டுகள் வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் சாதாரண நோய்களில் வருபவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படும் இதேவேளை கடுமையாக சுகயீனமுற்று வருபவர்களுக்கு நோய்க்கு ஏற்ப மருந்துகளை வழங்க முடியாத நிலைக்கு வைத்தியசாலை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பின்தங்கியுள்ள பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திகளையும் அங்கு காணப்படும் குறைபாடுகளையும் இணங்கண்டு நிவர்த்தி செய்வதற்கு மலையக அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதில்லை என பிரதேச மக்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே இவ்வைத்தியசாலைகளுக்கு தட்டுப்பாடாக இருக்கும் மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.