தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மூதூர் வீதி போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து பொது மக்கள் தோப்பூர்- சேருவில வீதியை மறித்து ஆட்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிப் அஹ்சன் (வயது17) என்ற சிறுவன் தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளான்.குறித்த சிறுவனை பிடித்த மூதூர் போக்குவரத்து பொலிஸார் சட்டநடவடிக்கை மேற் கொள்வதற்கு பதிலாக குறித்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதனை அவதானித்த தோப்பூர் பிரதேச இளைஞர்கள் வீதி போக்குவரத்து பொலிஸாராருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட அவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பித்துச் சென்றனர்.
இதனை அடுத்து குறித்த சிறுவனை தாக்கிய மூதூர் வீதி போக்குவரத்து பொலிஸார் நாள்வருக்கும் சட்டநடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென தெரிவித்த பொது மக்கள் சேருவில-தோப்பூர் வீதியை மறித்து டயர்களை எரித்து மாலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை ஆட்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மூன்று மணித்தியாலம் தோப்பூர் ஊடான போக்குவரத்து முழுமையாக தடைபட்டிருந்தது.
இவ்வாறு வீதியை மறித்து ஆட்பாட்டத்தில் ஈடுபட வேண்டாமென பொலிஸார் தெரிவித்தனர்.ஆனால் பொது மக்கள் அதையும் மீறி ஆட்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டனர்.பதிலுக்கு பொதுமக்கள் பொலிஸாரை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர்.இதனால் பொலிஸார் அவ்விடத்திலிருந்து ஓட்டமெடுத்தனர்.
யாராலும் சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் போக குறிப்பிட்ட இடத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் வருகை தந்தார்.இதனை அடுத்து தோப்பூர் ஜம்மியத்துல் உலமா மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்களுக்குமிடையிலான சந்திப்பு தோப்பூர் பெரியபள்ளிவாயலில் இடம் பெற்றது.அதில் பொது மக்களால்; சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.வெள்ளிக் கிழமை நாட்களில் பள்ளிவாயல்களுக்கு முன்னால் பொலிஸார் நின்று கொண்டு மோட்டார் சைக்கிளை சோதனையிடுவதை நிறுத்தல் வேண்டும்,தோப்பூர் பிரதேசத்திலுள்ள சின்ன வீதிகளுக்குள் போக்குவரத்து பொலிஸார் வருவதை இல்லாமல் செய்ய வேண்டும்,பொது மக்களுக்கு பொலிஸார் அடிப்பது இல்லாமல் செய்யப்பட வேண்டும்,
குறித்த சிறுவனை தாக்கிய நான்கு பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் பொது மக்களால் முன்வைக்கப்பட்டது.இதனை ஏற்றுக் கொண்ட மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்ததை அடுத்து ஆட்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.சம்பவத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட சிறுவன் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.