ஒன்பதாம் திகதிக்கு பின்னர் மலையக மக்களுக்கு தனி வீடு திட்டத்தை ஆரம்பிப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று தலவாக்கலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம், இதனால் இந்த தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் உரிமைகளுகக்காக போராடுபவர்கள்.
வீ.கே.வெள்ளையன் அவர்கள், சீ.வீ.வேலுப்பிள்ளைகள் போன்றவர்கள் மலையக மக்களின் உரிமைகளுக்காக வந்தவர்கள் அந்தவழியிலேயே நானும் இந்த தொழிற்சங்கத்திலேயே தலைமை தாங்கி மலையக மக்களுக்காக என்றும் குரல் கொடுப்பேன்.
இதனாலேயே எனது அமைச்சு பதவியை தூக்கி எரிந்து விட்டு மலையக மக்களுக்காக 7 பேர்ச் காணியுடன் கூடிய தனி வீடு அமைத்து கொடுக்க வந்தேன். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன, முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
நான் மட்டுமில்லை, மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகிய நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து இந்த கோரிக்கைகளை முன்வைத்து இன்று உங்கள் முன் வாக்குகளை கேட்டுள்ளோம்.
2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தனி மனிதராக நின்று எனது ஆதரவை வழங்கினேன். அப்பொழுது சில தலைவர்கள் ஜக்கிய தேசிய கட்சியுடன் இருந்தார்கள். அன்று நான் பயப்படவில்லை. இன்றும் நான் பயப்படவில்லை. மலையக மக்களாகிய உங்களுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளேன்.
ஆகவே 9ம் திகதி காலையில் நாங்கள் தனி வீடு திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என இதன்போது அவர் கூறினார்.(சு)