(எம்.ஜே.எம்.சஜீத்)
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை எத்pர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் இரு தனிநபர் பிரேரணைகளும், ஒரு அவசர பிரேணையுமாக மூன்று பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாகாண சபைகளாலும், உள்ளுராட்சி சபைகளாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டிட நிர்மாண திட்டங்களுக்கான அங்கீகாரம் வழங்குதல், தொழில் துறைகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், எரிபொருள் நிலையங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை நிர்மாணித்தல் என்பவற்றுக்கான அங்கீகாரம் வழங்கும் அதிகாரங்களை பறித்தெடுத்து நகர அபிவிருத்தி சபைக்கு வழங்குவதனை கண்டிப்பதுடன் இவ்வதிகாரங்களை தொடர்ந்தும் மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்கும் வழங்கக் கோரி அவசரப்பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான விசேட பொறிமுறை ஒன்றினை உருவாக்குமாறும் அதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நியமனங்களில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதுடன் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் போது பட்டதாரிகள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனங்களை வழங்க நடவடிக்கைகளை எடுப்பதுடன் பட்டதாரி நியமன வயது எல்லையினை 18-45 ஆக மட்டுப்படுத்த வேண்டுமெனவும் கோரி தனிநபர் பிரேரணை ஒன்றும் கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியளிப்புடனான அபிவிருத்தி நிதியினை 7மில்லியன் ரூபாவாக அதிகரிக்கக் கோரியும், கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் இறுதிப் பகுதியில் என்பதனால்; 2017ஆம் ஆண்டுக்கான மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியளிப்புடனான அபிவிருத்தி திட்டங்களை ஏப்ரல் மாதத்திலிருந்து செயற்படுத்துவற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி உதுமாலெப்பையினால் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.