உலகளாவிய ரீதியில் திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது ஒரு பாரிய சவாலாகவே இருக்கின்றது. இது எமது பிரதேசத்துக்கு மட்டும் என்ன விதிவிலக்கா...? நமது பிரதேசமும் இந்த பிரச்சினைக்கு நீண்ட நாட்களாக முகம்கொடுத்து வருகின்றது. ஆனாலும் நமது கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டியிருக்கின்றது.
நமது ஏறாவூர் வாவிக்கரை மிகவும் அழகான ஒரு பிரதேசம். இப்பிரதேசத்தினை எமதூரின் வளம் என்று சொல்லலாம். எமதூருக்குக் கிடைத்த வரம் என்று சொன்னாலும் மிகையாகாது. இப்பிரதேசத்தினை ஒட்டி பொது விளையாட்டு மைதானம், பாடசாலை, பள்ளிவாயல், சிறுவர் பூங்காவுடன் இணைந்த மக்களின் பொழுதுபோக்கு பூங்கா என பல்வேறுபட்ட, மக்களின் பாவனைக்கான முக்கிய ஸ்தலங்கள் இருக்கின்றன. இதனை அண்டியவாறுதான் இதுவரைகாலமும் திண்மக் கழிவுகளை அகற்றி குவிக்கும் இடமும்ஏறாவூர் நகரசபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் காரணமாக இந்த பகுதியின் முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. பிரதேச குடியிருப்பாளர்கள் மாத்திரமல்லாமல் ஊர்மக்கள் அனைவருமே இதனால் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பாரிய பிரச்சினைக்கான தீர்வு இதுவரைக்கும் எட்டாக்கனியாகவே இருந்துவந்தது.
ஏறாவூர் நகர், ஏறாவூர் பற்று ஆகிய பிரதேசங்களில் குவிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளினால் பல்வேறு அசௌகரியங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி வந்தனர். பொதுமக்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பாரிய சவாலாக இருக்கின்ற இந்தப் பிரச்சினையைக் கவனத்திற்கொண்ட கௌரவ முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் ஐரோப்பிய யூனியனின் UNOPS அமைப்பின் 950 மில்லியன் ரூபா நிதியில் செங்கலடி கொடுவாமடு பகுதியில் ஒரு பாரிய திண்மக் கழிவு சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திண்மக் கழிவு சேகரிப்பு நிலையம் வைபவ ரீதியாக எதிர்வரும் 03.11.2016 அன்று காலை 11.00 மணியளவில் திறந்துவைக்கப்படவிருக்கின்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான நசீர்அஹமட் அவர்களும், ஐரோப்பிய யூனியனின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்கியு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் PSM சார்ள்ஸ் அவர்களும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இதன் பிற்பாடு ஏறாவூர் நகர், ஏறாவூர் பற்று பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் கொடுவாமடுவில் அமையப்பெற்றிருக்கும் திண்மக் கழிவு சேகரிக்கும் நிலையத்துக்கே நேரடியாக அனுப்பிவைக்கப்படும்.