தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறு கோரி கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, பிரதம நீதியரசர் கே. ஶ்ரீபவன் மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியினால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், அடிப்படை உரிமைகள் தொடர்பான அவரது மனுவை அடுத்த பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பாக இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது பெற்றுக்கொண்ட, அவரது உடற்பாகங்கள் காணாமற்போன சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைதுசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தாம் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு ஆனந்த சமரசேகர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தமது அடிப்படை உரிமை மனுவில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.