நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளதாக தெரிய வருகிறது.
சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி இரவு கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக முன் நின்று செயற்பட்ட 48 சிவில் அமைப்புகளின் கலைஞர்கள் மற்றும் 140க்கும் அதிகமான பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு தொடர்பில், நீதியான சமூகத்திற்கான அமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் சரத் விஜேசூரிய கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்தின் எதிர்கால பயணம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு 5 விடயங்கள் உள்ளடங்கிய விசேட குறிப்பு ஒன்றை நாங்கள் ஜனாதிபதியிடம் வழங்கினோம். இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் அரசியல் திருத்தம் ஒன்று மேற்கொள்ளுமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.