எந்த தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஷ்டிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த வாரம் மாவீரர் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மாவீரர் தினத்தினை கொண்டாடக்கூடாது என நல்லாட்சி அரசாங்கத்திலும் கூட அச்சுறுத்தல்கள் விடுவிக்கப்படுவது வேதனை அளிப்பதாக அவர் கூறினார். அரசாங்கத்திற்கு எதிராக போராடிய ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் கார்த்திகை வீரர் தினம் என எந்த தடையுமின்றி கொண்டாடி வருகின்றார்கள்.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் போராட்டத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக தோற்றம் காட்டுவது. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையினை எந்த சட்டத்தினாலும் தடுக்கமுடியாது.
உலகெங்கும் இருக்கக்கூடிய புலம்பெயர் உறவுகள் மற்றும் தொப்புள்கொடி உறவுகளும் நினைவுகூரும் அந்த நேரத்தில் தமிழர் தயாகத்தில் உள்ள மக்களும் நினைவுகூர அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
எந்த மதத்தலைவர்களாக இருந்தாலும், கோவில்களிலேயோ, தேவாலயங்களிலேயோ தீபமேற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீடுகளில் தீபமேற்ற அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் நல்லூர் கோவில் மற்றும் மரியன்னை பேராலயத்திலும் அஞ்சலி செலுத்த முடியும் என்றார்.
ஒரு விடயத்தினை மூடி மறைத்து விட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தமது உயிர்களை மாய்த்த மாவீரர்களுக்கும், போரில் கொல்லப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்துமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.(TK)