Post views-

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்ராண்டு விழா கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.



எதிர்வரும் மாதம் முஸ்லிம்களைப்பொறுத்தவரையில் ஒரு புனிதமான மாதமாகும். பொய்யுரைத்தல், புறம்பேசுதல், இட்டுக்கட்டுதல், பிழையான செய்திகளை பரப்பி மனித உள்ளங்களை நோகடித்தல் என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான பயிற்சியளிக்கும் மாதமாக ரமழான் வருகின்றது. இந்நிலையில் எமது பிழைகளை சரிசெய்து மனங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியது எம் அனைவர் மீதும் கடமையாகும். அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஓட்டமாவடி பாடசாலை சமூகத்தையும், பிரதேச அரசியல் பிரமுகர்களையும், தனிமனித ஆளுமைகளையும் அசிங்கமான விமர்சனங்களைக்கொண்டு விமர்சிப்பதும், சிலரது தூய்மையான எண்ணங்களுக்கு தீவைப்பதற்குமான பதிவூட்டல்கள் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

விமர்சனங்களுக்கான அடிப்படைக்காரணம் விழா முடிந்த பின்னர் பாடசாலை இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட கடன்சுமையை கொண்டுள்ளது என்ற செய்தியாகும். விழா எப்படி நடந்தது, எந்த அனாச்சாரங்கள் இடம்பெற்றது, எந்த நல்ல பெறுபேறுகள் கிடைத்தது என்று நிறைய ஆய்வுக்குற்படுத்தவேண்டிய தேவையில்லை. ஏனெனில் நடந்தவை குறித்து ஒவ்வொரு கல்குடா பிரஜையும் மாத்திரமல்ல தேசியமும் அறிந்துள்ளது மறுக்கமுடியாத ஒன்று. 

அரசியல் பின்னணிகளில் நூற்ராண்டு விழா சிக்கித்தவித்தாலும் எது நடந்தாலும் பாடசாலைக்கு ஏதாவது நண்மைகள் விளைந்தால் போதும் என்ற மனநிலையில் சிலர் மெளனமாக இருந்தமையை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். 

ஒரு நாட்டின் ஜனாதிபதி வருகையால் கூட பெளதிக ரீதியில் எவ்வித வளமும் கிடைக்கப்பெறவில்லை என்ற ஏமாற்றம் அனைவர் உள்ளத்திலும் இருப்பதை இதய சுத்தியுடன் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். 
ஆனால் உள்ளூரிலும் வெளியூரிலும் பாடசாலையின் பெயரைப்பயன்படுத்தி வசூல் செய்யப்பட்ட பணம் தொடர்பில் யாவரும் மெளனித்திருப்பது ஏற்கமுடியாதது. 

குறிப்பாக கொழும்புக்கிளை இவ்விடயத்தில் முன்மாதிரியாக செயற்பட்டிருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயமாகும். கெளரவ பிரதி அமைச்சரின் வழிகாட்டலில் நடாத்தப்பட்ட அனைத்தும் முடிந்த பின்னர் அதன் கணக்கறிக்கைகள் சரியாக மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் இப்பாடசாலையை நேசிக்கும் ஒவ்வொரு மகனுக்குள்ளும் காணப்படுகின்றது. பல லட்சங்கள், மில்லியன்கள், கோடிகள் என பலரும் வாய்க்கு வந்தவாறு பேசிக்கொள்ளும் போது , ஒரு அமைச்சர் 10 இலட்சம் கொடுத்ததாகவும், விளம்பரங்களுக்காக கம்பெனிகள் பல இலட்சங்களை கொடுத்ததாகவும், பல முக்கியஸ்த்தர்கள் பல இலட்சங்களை வழங்கியதாகவும் கதைகள் உலாவுகின்ற வேளையில், கடன்சுமைகளுக்கும், அபாண்டமான குற்றச்சாட்டுக்களுக்கும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் தலையில் பதிலை போட்டுச்செல்வதும் நியாயமாக அமையாது. 

உள்ளூரில் வசூலிக்கப்பட்ட தொகைகள் எவ்வளவு, களியாட்ட நிகழ்வின் வரவு செலவு எவ்வளவு, என்பன குறித்து எவ்வித கணக்கறிக்கைகளும் இல்லாமல் இருப்பது இவ்விழாவினை முன்னின்று நடாத்தியவர்களுக்கோ, நூற்ராண்டினை கொண்டாடும் பாடசாலைக்க்கோ முன்மாதிரியாக அமையாது. சாதாரண ஒரு சங்கத்தில் கூட ஓடிட் பண்ணப்பட்ட கணக்கறிக்கைகள் பேணப்படுகின்றபோது தேசிய ரீதியில் பேசப்பட்ட ஒரு விழாவிற்கான கணக்கறிக்கைகள் முன்வைக்கப்படாமை ஏற்பாட்டுக்குழுமீது வீணான சந்தேகங்களையும் எழுப்புவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

ஊரின் மீதும் இப்பாடசாலை மீதும் அக்கறை கொண்டு கொண்டு செயல்பட்ட பல அமைப்புக்களும் விழாவிற்கான கணக்கறிக்கை தொடர்பில் அமைதி காப்பது உசிதமானதல்ல. நிகழ்வுகளைப்பற்றி பேசிவிட்டு அரசியல் ஆதங்கங்களை கொட்டிவிட்டு நகர்வது ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்ததல்ல. பேனைகளையும், கப்களையும், தொப்பிகளையும், புத்தகங்களையும் விற்பனைசெய்து சேர்த்துக்கொடுத்த பணத்தொகை இவ்வளவுதான் என அவர்கள் உத்தியோகப்பூர்வமாகவாவது சமூக வலைத்தளங்களினுடாக அறிவுப்பு செய்வது ஒரு முன்மாதிரியாகவும் ட்ரான்ஸ்பேரண்ஸ் ஆகவும் அமையும். 

கட்டார் பழைய மாணவர் சங்கமானது தமது பஸ்வண்டி கொள்வனவிற்காக செய்யும் முயற்சியில் சேர்க்கப்பட்ட பணத்தினை அதற்காகவே அவர்கள் செலவு செய்து அத்திட்டத்தினை முடித்தால் குறைந்தது நூற்றாண்டு விழாவின் பிரயோஜனமிக்க எச்சமாக, அடையாள சின்னமாக அது எஞ்சி நிற்கும். 

எனவே இவ்விடயத்தில் பரிசீலனைக்குற்படுத்தப்பட்டு நன்கு சரிபார்க்கப்பட்டு முறையான கணக்கறிக்கையினை வழிநடாத்திய பிரதி அமைச்சர் அவர்கள் விரைவில் பாடசாலை சமூகத்திடமும் மக்கள் மன்றத்திடமும் சமர்ப்பிப்பார் என்ற குறைந்த பட்ச அவா காணப்படுகின்றது. இதன் மூலம் எதிர்வரும் ரமலான் மாதத்தில் இது குறித்த தேவையற்ற மனக்கசப்புக்களையும், பாவங்களையும் பகிர்ந்து கொள்வதனை தவிர்க்க சிறந்த வழிமுறையாக அமையுமென கருதுகின்றேன்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்