(எம்.ஜே.எம்.சஜீத்)
விதி முறைகளுக்கு புறம்பாக புதிய பஸ்களுக்கு பாதை அனுமதி வழங்கியதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று (20) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்ற போது 2017ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டு கல்முனையில் இருந்து வாகரை ஊடாக திருகோணமலை வரை ஏராளமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அதற்கு புறம்பாக எவ்விதமான விதி முறைமைகளையும் பின்பற்றாமல் மேலும் சில பஸ் வண்டிகளுக்கு கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதனால்; ஏற்கனவே சேவையில் ஈடுபட்டுவரும் பஸ் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும், முதலமைச்சின் செயலாளருக்கும்;, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் கிழக்கு மாகாண பஸ் உரிமையாளர் சங்கத்தினால் இந்த விடயம் தொடர்பாக பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போதும், அவசர நிலமைகளின் போதும் இத்தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் கிழக்கு மாகாண மக்களின் போக்குவரத்து துறைக்கு பாரிய பங்கினை வழங்கியுள்ளனர்.
இப்பயண வழி ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 13 பஸ் வண்டிகளும், தனியாருக்கு சொந்தமான 21 பஸ் வண்டிகளும் மொத்தமாக 34 பஸ் வண்டிகள் மிக நீண்ட காலமாக சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இங்கு சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கான நேர இடைவெளியாக 20 தொடக்கம் 30 நிமிடங்களே வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வழி தொடர்பாக எந்த விதமான முன் அனுபவமும் இல்லாத ஒரு நபருக்கு பாதை பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களிடமோ அல்லது இலங்கை போக்குவரத்து சபையிடமோ சம்மதம் பெறப்படவில்லை என இவ்வழியூடாக நீண்ட காலமாக சேவையில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையும், இலங்கை போக்குவரத்து சபைக்குரிய கிழக்கு பிராந்திய அலுவலகமும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக செயற்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் வருமானம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே, கிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையும் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும். கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையை கிழக்கு மாகாணத்தில் முதலாவது தடவையாக உருவாக்குவதற்கு முன்னாள் கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




