திருகோணமலை மாவட்டம், பாட்டாளிபுரம், நீலாக்கேணி பகுதியில் 4 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா, கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தி முழு கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமி அஜந்தா நேற்று (08) காலை முதல் காணாமற்போயிருந்த நிலையில், வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுமி ஒருவரின் சடலம் காட்டுப் பகுதியில் காணப்படுவதாகக் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு நேற்று முற்பகல் சென்ற நீதவான், முதற்கட்ட விசாரணைகளை நிறைவு செய்து, பிரேதப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தார்.
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையை அடுத்து, 16 வயது சிறுவன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுமியின் உறவுமுறை சிறுவன் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பிரேதப் பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.