மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாஸ அன்று மலையக மக்களுக்கு வாக்ககுரிமை பெற்றுக்கொடுத்தார். இன்று அவருடைய மகன் சஜித் பிரமதாஸ வீட்டுரிமையை பெற்றுக்கொடுக்கின்றார்.
அன்று ரணசிங்க பிரமதாஸ வாக்குரிமை பெற்றுக்கொடுத்திருக்காவிட்டால் இன்று எமக்கு வீட்டுரிமை கிடைத்திருக்காது.
எனவே மலையக மக்கள் என்றுமே பிரமதாஸ குடும்பத்தை மறக்க மாட்டார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அபிவிருத்தி தொலைநோக்குக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய வீடமைப்பு நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரமதாஸ அவர்களின் நிதி ஒதுக்கீட்டினூடாக 03.07.2016 அன்று அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் வீடு இல்லாத 25 குடும்பங்களுக்கு தனி வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு கூறுகையில்,
இந்தியாவில் மறைந்த தலைவர் எம்.ஜீ.ஆர் உயிரிழந்த பொழுது மலையக மக்கள் அவருடைய ஆத்மா சாந்திக்காக தீபம் ஏற்றினார்கள். அதேபோல ரணசிங்க பிரமதாஸ மறைந்தவுடன் அவருடைய ஆத்மா சாந்திகாகவும், மலையக மக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் தீபம் ஏற்றினார்கள்.
இந்த நிகழ்வானது மலையக மக்கள் ரணசிங்க பிரமதாஸவை எந்த அளவிற்கு நேசித்திருக்கின்றார்கள் என எடுத்துக்காட்டுகின்றது. இன்று அவருடைய பாதையில் அவருடைய மகன் பயணிப்பதை நாம் வரவேற்கின்றோம்.
இன்னும் அதிகமான வீடுகள் எமக்கு தேவைப்படுகின்றது. அதற்கு வீடமைப்பு அமைச்சர் இன்னும் அதிகமான வீடுகளை எமக்கு கட்டிக்கொடுக்க வேண்டும்.
மலையகத்தில் வீடமைப்பு திட்டம் எந்த எந்த வழிகளில் கிடைக்கப்பெறுகின்றதோ அவ் அத்தனை வழிகளையும் பயன்படுத்தி வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வோம்.
அமைச்சர் திகாம்பரம் இந்த வேலைத்திட்டத்தில் முன்நின்று செயல்படுவார். அவருக்கு பக்க பலமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வங்கி கடன் மூலமாக தனி வீடுகளை அமைத்து வருகின்றோம்.
மலையகத்தில் எல்லோருக்குமே இலவசமாக வீட்டு திட்டம் அமைக்க முடியாது. இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு நிர்மாணிக்கப்படும் வீடுகளை மக்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி நிர்மாணித்துக் கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம் மலையக மக்களின் வீடமைப்பு, கல்வி தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த செயல்பாடை தொடரும் பட்சத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் எமது மக்களின் வாழ்வில் நிச்சியமாக ஒரு மாற்றம் வரும். அந்த மாற்றத்தை நோக்கி நாம் பயணித்துக்கொண்டுயிருக்கின்றோம் என்றார்.
(க.கிஷாந்தன்)




