அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் பஸ் கட்டண சீர்திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பஸ் கட்டண சீர்திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு கருத்தினைத் தெரிவிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள், பஸ் கட்டண சீர்திருத்தக் குழுவினரால் யோசனைகளாக எதிர்வரும் அமைச்சரவையில் முன்வைக்கப்படும்.
இதன் பிரகாரம் பஸ் கட்டண சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சரவையினால் எடுக்கப்படும் தீர்மானம் போக்குவரத்து அமைச்சரால் அறிவிக்கப்படும்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினாலோ, எந்தவொரு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினாலோ மீண்டும் அறிவிக்கப்படும் வரை தனியார் பஸ் வீதி அனுமதிப் பத்திரத்தினை வழங்காது இருத்தல் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.




