இலங்கை நாட்டில்
இனரீதியான முரண்பாடுகள் தீராப் பிணி போல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.இலங்கையின்
இனப்பிரச்சினைத் தீர்விற்கு பல் கோணப் பேச்சு வார்த்தைகள்,ஒப்பந்தங்கள் இடம்பெற்ற
போதும் அவைகள் எதுவும் இது வரை வெற்றி பெறாததாகவே இருக்கின்றன.இலங்கையின்
இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்தியாவால் இலங்கை நாட்டின் மீது திணிக்கப்பட்டது
போன்றதொரு விடயம் தான் பதிமூன்றாம் அரசியல் சீர்திருத்தமாகும்.இச்
சீர்திருத்தமானது தமிழ் மக்களின்,தமிழ் அரசியற் கட்சிகளின் முற்று முழுதான
அங்கீகாரத்தோடு அம் மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூற முடியாது.இலங்கையின் பழம்
பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் செல்வநாயகம் அந் நேரத்தில்
இலங்கை நாட்டின் தலைவர்களாகவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க,டட்லி
சேனநாயக்க ஆகிய இருவருடனும் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உடன்பாடு ரீதியான
ஒப்பந்தத்தை செய்திருந்த போதும் பேரினவாதிகளின் கூக்குரல்களுக்கு அஞ்சி இறுதியில் அவ்விரு
ஒப்பந்தங்களும் குப்பையில் வீசப்படும் நிலைக்குச் சென்றிருந்தன.1949ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களுக்கு
டொனமூர் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட வாக்குரிமை,குடியுரிமை ஆகியன ஐக்கிய
தேசியக் கட்சி அரசால் பறிக்கப்பட்டிருந்தது.இவ்வாறான பலவற்றின் விளைவுகளால்
விரக்தியுற்ற தமிழ் மக்கள் 1970 மற்றும் 1980 காலப்பகுதிகளில் இலங்கை அரசிடமிருந்து
தங்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாதென்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இம் மனோ
நிலையானது தமிழ் மக்களை சமஷ்டித் தீர்வைப் பெற்று தனி அரசொன்றை அமைக்கும் நிலைக்கு
இட்டுச் சென்றது.இது போன்ற தமிழ் மக்களின் தீவிரமான கொள்கைகள் பல்வேறு இன
மோதல்களைத் தோற்றுவித்திருந்தன.இவ்வாறான மோதல்களில் ஒன்றாகத் தான் 1983ம் ஆண்டைய யூலைக் கலவரம் கூட தோற்றம்பெற்றிருந்தது.இந்த இன
மோதலானது புவியியல் சார்ந்த மோதலாகவும் உருவெடுத்திருந்தது.
இவ்வாறான நிலையில் தான் 1987ம் ஆண்டு யாழ்
குடா நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவம் ஒப்பரேசன் லிபரேசன் (operation liberation) என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.இந்த இராணுவ
நடவடிக்கை தமிழ் நாட்டில் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்ததோடு தெற்காசிய புவியியல்
சார்ந்த மோதலாகவும் உருவெடுத்திருந்தமையால் இவ் இனப் பிரச்சினை விடயத்தில் இந்திய
அரசு இலங்கை நாட்டின் மீது தலையிட்டேயாக வேண்டுமென்ற நிர்ப்பந்த நிலைக்குத்
தள்ளப்பட்டது.இதன் போது இந்தியா இலங்கை வான் பரப்பை மீறி யாழ் குடா நாட்டில்
உணவுப் பொதிகளையிட்டது.இதனை இந்தியாவின் இலங்கை நாட்டிற்கானதொரு எச்சரிக்கையாகவே
நோக்கலாம்.அதாவது இலங்கை அரசு இந்தியாவின் தீர்வுத் திட்டத்திற்கு உடன்பட
மறுக்கும் போது யுத்தத்தை பிரகடனப்படுத்தியாவது இப் பிரச்சினையை இந்தியா
முடிவிற்கு கொண்டுவரும் என்பது தான் இதனுடைய அர்த்தமாகவுமிருந்தது.
இந்தியாவின் இச் செயற்பாடானது அந் நேரத்திலிருந்த ஜே.ஆர் அரசை கிலி கொள்ளச் செய்திருந்தது.இந்தியாவுடன்
மோதுகின்றளவு இலங்கை அரசிடம் பலமிருக்காத போதும் இந்தியாவை சாதூரியத்தின் மூலம்
வெல்லும் பலம் இலங்கை அரசிடம் இருந்துள்ளதென்பதை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை
அறிவதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.இதன் பின்னணியில் தான் இலங்கை இந்திய
ஒப்பந்தம் 1987ம் ஆண்டு கைச் சாத்திடப்பட்டது.இவ் ஒப்பந்தத்தில் பிரகாரம்
உருவாக்கப்பட்ட ஒரு முறை தான் மாகாண சபையாகும்.இம் மாகாண சபை முறைமையானது இந்திய
அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டாலும் அவ் அரசால் வரையப்பட்ட ஒன்றல்ல.1957ம் ஆண்டைய பண்டா செல்வா ஒப்பந்தத்தில் இனப் பிரச்சினைத் தீர்விற்கு மாகாண சபைகளைத்
தாபிக்கும் ஆலோசனை முன் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அந் நேரத்தில் தமிழ்
மக்களுக்கு பண்டாரநாயக்க வடக்கு,கிழக்கு மாகாணத்தை விற்று விட்டார் என்ற
விமர்சனங்கள் தோன்றியதோடு வடக்கு,கிழக்கு மாகாணங்களை கரு மையினால் வேறு படுத்திய
இலங்கை படங்கள் பேரின வாதிகளால் வெளியிடப்பட்டமை இங்கு நினைவூட்டத்தக்கது.
இலங்கை அரசியலமைப்பின் 2ம் சரத்தின் படி இலங்கை
நாடு ஒரு ஒற்றையாட்சி நாடாகுமெனக்
குறிப்பிடுகிறது.இப்படி இருக்கையில் மாகாண சபைகளைத் தாபித்தல் இச் சரத்தை சற்றுக்
கேள்விக்குட்படுத்துகிறது.இச் சரத்தை மீறாமல் இச் சபைகளைத் தாபித்திருப்பதானது இம்
மாகாண சபைகளில் பூரண அதிகாரமிருக்காது என்பதை தெளிவாக்குகிறது.மாகாண சபைகளுக்கு
பூரண அதிகாரமும் தனித்தியங்கும் வல்லமையையும் இலங்கையரசு இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம்
ஏற்படுத்திக் கொடுத்தால் இலங்கை சமஷ்டிக் குடியரசாகிவிடும்.அரசியலமைப்பின் 2ம் சரத்தை மாற்ற
வேண்டுமாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தியே மாற்ற வேண்டும்.சர்வஜன
வாக்கெடுப்பு நடாத்தி இதனை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிக்கும் போது இனவாதக் கருத்துக்கள்
மேல் கிளம்பி நிச்சயம் அவ்வாறான தீர்வுத் திட்டங்கள் தோல்வியுறும்.இலங்கையின்
முன்னாள் அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தன இவ் அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்டு வந்த
போது தென்னிலங்கை மக்களிடையே பல்வேறு விதமான இன வாதக் கருத்துக்கள்
பரப்பப்பட்டிருந்தன.இணைந்த வட கிழக்கிற்குச் செல்ல கடவுச் சீட்டு எடுக்க வேண்டும்
போன்ற பல்வேறு விசமக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன.
இவ்வாறான இனவாதக் கருத்துக்களின் முன் ஜே.ஆர் ஜெயவர்த்தன
அரசு அப்படியே ஆடிப் போனது.இப்படி மிகவும் சிரமத்திற்கும் போராட்டத்திற்கும்
மத்தியில் கொண்டுவரப்பட்ட ஒரு அரசியல் சீர்திருத்தம் தான் பதின் மூன்றாம் அரசியல்
சீர் திருத்தமாகும்.பதிமூன்றாம் அரசியல் சீர் திருத்தம் தொடர்பான வழக்கில் (1987) [2 SLR 312] உயர் நீதி மன்ற
நீதிபதிகளில் பெரும்பான்மையானோரின் கருத்தின் படி மாகாண சபைகள் மைத்திய அரசுக்கும்
சனாதிபதிக்கு கீழ்பட்ட அமைப்புக்களாகயிருந்தன.இந்திய அரசு சமஸ்டித் தீர்வைப்
பெற்றுக்கொடுக்க முயன்றிருந்தால் அது பேரின வாதிகளால் இலங்கை அரசியலமைப்பின்
அடிப்படையில் முறையடிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்து தான் சமஷ்டியின் சாயல்
கொண்ட மாகாண சபை முறைமையை அந் நேரத்தில் இந்திய அரசு முன் வைத்திருந்ததாகவே
நோக்கலாம்.இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்ட வேளை கூட இலங்கை தமிழ்
மக்களிடையே சமஷ்டிக் கொள்கை வலுவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ்
தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி கேட்டு விடாப் பிடியாக உள்ளமையும் விக்னேஷ்வரன்
சமஷ்டித் தீர்வுதான் தமிழ் மக்களுக்கான தீர்வாக கேட்டு நிற்பதும் இறுதியில் கானல்
நீராகவே முடியும்.அந் நேரத்தில் இதற்கு இலங்கை அரசு மறுத்திருந்தால் இந்திய அரசு
இலங்கை நாட்டின் மீது மிகக் கடுமையான போக்கைக் கையாண்டிருக்கும்.இந்தியா பாக்கிஸ்தானிற்கு
அடுத்து தனது வான் பரப்பை இவ்விடயத்திலே மீறியமை இதனை துல்லியமாக்குகிறது.தற்போது
அவ்வாறான அழுத்தங்களில்லை.அந் நேரத்தில் சாதிக்க முடியாத இத் தீர்வுத் திட்டத்தை
தமிழ் மக்கள் தற்போது சாதிப்பார்களா? என்றால் இல்லை என்பதுவே பதிலாகும்.அந்
நேரத்தில் இவ்விடயத்தை தனது கையில் எடுத்து நடை பயின்ற இந்திய அரசு தற்போது இவ்விடயங்களில்
நேரடியாக தங்களது பலத்தை காட்டி சாதிக்க முயலாதிருப்பது இதற்கான
சான்றாகும்.சர்வதேச நாடுகள் என்ன தான் அழுத்தங்களை வழங்கினாலும் இலங்கையின்
இறையாண்மை விடயத்தில் கை வைக்க அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை.
இந்த பதின் மூன்றாம் சீர்திருத்தமானது வடக்கு,கிழக்கு தமிழர்களை மாத்திரம்
மையப்படுத்தியே கொண்டுவரப்பட்டிருந்தது.இதன் காரணமாக வடக்கு,கிழக்கு மாகாண சபைகளை மாத்திரம்
அமைத்திரிந்தாலே போதுமானதாகும்.எனினும்,இலங்கை நாட்டின் ஏனைய பாகங்களில் இது தொடர்பில்
பலத்த விமர்சனங்கள் தோன்ற ஏதுவாக அமைந்திருக்கும்.இன்று கூட வடக்கு,கிழக்கு மாகாண
சபைகள் தவிர்ந்து வேறு எங்கும் மாகாண சபைக்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்படவில்லை
என்ற கருத்தோ ஆளுநர் மாகாண சபை விடயங்களில் தலையிடுகிறார் போன்ற சர்ச்சைகளோ
எழுவதில்லை.ஏனைய மாகாண சபைகள் பேரின வாதிகளின் ஆதிக்கத்தின் கீழிருப்பதால் இலங்கை
நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதி ஆளுநர் மாகாண சபைகளின் விடயத்தில் கை போட்டு
ஒரு விடயத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியமுமில்லை.இலங்கை அரசியலமைப்பின் 154ஆ.(02) இன் அடிப்படையில் ஆளுநரை நியமிக்குமதிகாரம் இலங்கை சனாதிபதிக்குள்ள அதே நேரம்
அவருக்கு விரும்பியவாங்கு பதவி வகித்தல் வேண்டுமெனவும் கூறுகிறது.பொதுவாக
வடக்கு,கிழக்கு மாகாண சபைகள் தவிர்ந்து ஏனைய மாகாண சபைகள் ஆளும் அரசின்
ஆளுகைக்குட்பட்டிருப்பதால் சனாதிபதி ஆளுநர் மூலம் மாகாண சபைகளை கட்டுப்படுத்த முயற்சிக்க
வேண்டிய தேவையில்லை.வடக்கு,கிழக்கு தவிர்ந்து ஏனைய மாகாண சபைகள் ஆளும் அரசின் கையை
விட்டும் நழுவிச் செல்லும் போது ஆளும் அரசு தனது செல்வாக்கை நிலை நிறுத்த ஆளுநர் மூலம்
மாகாண சபைகளின் செயற்பாடுகளை தடுக்க நிச்சயம் எப்போதோ ஒரு நாள் முயற்சிக்கும்.இதன்
போது வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி எழுவது போன்ற ஆளுநர் அதிகாரப்
பிரச்சினைகள் தோன்றும்.ஏனைய மாகாணங்களில் ஆளுநர் அதிகாரச் குற்றச் சாட்டுக்கள்
முன் வைக்கப்படாமையால் ஆளுநர் அதிகாரப் பிரச்சினை சிறு பான்மையினரின் பிரச்சினையாக
இலங்கை மக்களிடம் நோக்கப்படுகிறது.இது சிறு பான்மையினரின் பிரச்சினையாக
நோக்கப்படுவதால் இதனை சரி செய்து கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல.இது நீண்ட
ஆய்வுக்குட்படுத்த வேண்டிய பகுதி என்பதால் இத்தோடு இதற்கு முற்றுப் புள்ளி
வைக்கின்றேன்.
தற்போது இலங்கை நாடு ஒரு அரசியலமைப்பு சீர் திருத்தத்தை நோக்கி
பயணித்துக்கொண்டிருக்கின்றது.இச்சந்தர்ப்பத்தில் பதின் மூன்றாம் அரசியலமைப்பு சீர்
திருத்தம் நிறைவேறியது போன்று சிறு பான்மையினரின் தேவைகளுக்காக பாராளுமன்றத்தில் சில
திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும் என்ற கருத்து எழலாம்.இதனை
நிறைவேற்றும் சந்தர்ப்பத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசு தனித்து மூன்றில் இரண்டு பெரும்
பான்மை பலத்தைப் பெற்றிருந்தது.இவ்வாறு அவர் இப் பலத்தைப் பெற்றிருந்த
சந்தர்ப்பத்தில் அப் பலத்தைப் பெறுவதற்கு ஏதுவாக தொகுதி வாரித் தேர்தல் முறைமை
நடைமுறையில் இருந்தது.இப்போதிருக்கின்ற விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம்
அப்படியானதொரு பலமிக்க ஆட்சியப் பெறுவது கடினமாகும் என்பதும் இவ்விடத்தில்
விளங்கிக்கொள்ள வேண்டியதொரு விடயமாகும்.தற்போது தேசிய அரசு நிறுவப்பட்டிருப்பதால்
தற்போதைய அரசுக்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும் பான்மையை பெறக் கூடிய
வாய்ப்புள்ளது.எனினும்,தற்போது நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பின் பல்வேறு
பகுதிகள் மாற்றப்படவுள்ளதால் இலங்கை அரசு சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய
நிலையுள்ளது.பாராளுமன்றப் பலம் என்பது ஒரு கட்சியில் அதிகம் தங்கியிருக்கும்.பொதுஜன
வாக்கெடுப்பென்பது மக்களில் தங்கியிருக்கும்.அன்று ஜே.ஆர் அரசு பதின் மூன்றாம்
சீர் திருத்தத்தை நிறைவேற்ற பொது ஜன வாக்கெடுப்பிற்கு
செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அந்த வாக்கெடுப்பு நிச்சயம்
தோல்வியை சந்தித்திருக்கும்.இங்குள்ள ஒரு படிப்பினை தேசிய அரசு நிறுவப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாது
பாராளுமன்றத்தோடு முற்றுப்பெறக் கூடியவற்றை சாதிப்பதற்கு சிறு பான்மை சமூகம்
முயல்வது மிகவும் பொருத்தமானது.இதற்குப் பிறகு இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை சிறு
பான்மை சமூகத்தினர் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாகும்.
ஜே.ஆர் ஜெயவர்த்தன கிழட்டு இராஜதந்திரி என வர்ணிக்கக்கடும் ஒருவராவார்.அவர்
சிறு பான்மையினருக்கு முற்று முழுதாக சார்பானதொரு சீர் திருத்தத்தை
நிறைவேற்றிருப்பார் என்றால் அதனை நம்புவது மிகக் கடினமானதாகும்.அன்று பண்டா செல்வா
ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது ஜே.ஆர் ஜெயவர்த்தன அதற்கு எதிராக பாதயாத்திரை
சென்றிருந்தமை இதனைத் துல்லியமாக்குகின்றது.இந்த வகையில் மாகாண சபைகளின் அதிகாரத்தைக்
குறைக்கும் பல நுணுக்கங்களை உட் புகுத்தியே பதின் மூன்றாம் அரசியல் சீர்
திருத்தத்தை நிறைவேற்றியிருந்தார்.
இந்திய அரசு இவ் அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசின் மீது திணித்த பிறகு
அதனைக் கவனிக்கத் தவறியமை இந்திய அரசின் மிகப் பெரிய தவறாகும்.இந்திய இலங்கை
ஒப்பந்தத்தின் பிரகாரம் 2 (14) எனும் பந்தியில் இந்திய
அரசு இத் தீர்மானங்களை பொறுப்பெடுப்பதோடு உத்தரவாதப்படுத்தி இப் பிரேரணைய அமுல்
படுத்துவதற்கு முயற்சிக்கும் எனக் கூறியுள்ளது.இதுவரையில் பதின் மூன்றாம் சீர்
திருத்தத்தின் படி கூறப்பட்ட காணி,போலிஸ் அதிகாரங்கள் இன்னும் மாகாண சபைகளுக்கு
வழங்கப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேல் மாகாண முதலமைச்சராக இருந்த
போது போலிஸ் அதிகாரத்தை மத்திய அரசு மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற
கருத்தைக் கூறி இருந்தார்.இவர் ஆட்சிக்கு வந்த போது அப்படியான எதனையும் செய்யவில்லை.தற்போதைய
ஜனாதிபதி மைத்திரி கூட 2008ம் ஆண்டு மாகாண
சபைகளுக்கு பதின் மூன்றாம் அரசியல் சீர்திருத்தத்திற்கமைய பொலிஸ் அதிகாரத்தை வழங்க
வேண்டுமென சு.கவின் பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்த்தில் இருந்து கொண்டு கூறி
இருந்தார்.இவர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள போது செய்வாரா என்பது வினாவுடன்
நிற்கின்றது. ஆயுதக் குழுக்களின் ஆதிக்கங்கள் வடக்கு,கிழக்கில் காணப்படுவதை காரணம்
காட்டி 2008ம் ஆண்டளவில் ஜே.வி.பி பதின் மூன்றாம் அரசியல் சீர் திருத்தத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்த தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்திய
இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களையும்
செயற்பாட்டில் இந்திய அரசு தோல்வியைத் தழுவிருந்தது.இலங்கையே இந்திய அமைதி
காக்கும் படையினரை தங்களது நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி இருந்தமையோடு இந்திய
இலங்கை ஒப்பந்தம் முறிந்துவிட்டதாகவே நோக்கலாம்.இதனால் தான் என்னவோ இந்திய அரசு
இவ்விடயத்தில் தனது பார்வையை செலுத்த அக்கறை கொள்ளாமல் இருக்கின்றது.
பதின்மூன்றாம் சீர் திருத்தம் அமுல் படுத்தப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை
அதன் கட்டமைப்புக்களை மாற்றி தமிழ் மக்கள் பொருந்திக்கொள்ளும் வகையில்
வழங்குவதற்கு பல கட்சிகள் முயற்சித்து வருகின்ற போதும் அது இற்றைவரை எக்
கட்சிக்கும் கை கூடவில்லை.1997ம் ஆண்டு அரசியலமைப்புச்
சீர் திருத்தத்திற்கான அரசாங்க யோசனையில் மாகாண சபை எனும் பதத்திற்கு பதிலாக
பிராந்திய சபைகள் எனும் பதம் முன் வைக்கப்பட்டிருந்தது.பிராந்திய சபைகள் எனும்
பதத்தை நோக்கும் போது மாகாண சபைகளிலிருந்து முற்று முழுதாக வேறு பட்டு காணப்படும் அமைப்பு
போன்று தோன்றினாலும் அதில் பதின் மூன்றாம் சீர் திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்ட
மாகாண சபைக்கும் அதற்கும் பெரிதான வேறு பாடுகள் காணப்படவில்லை.எப்போதோ ஒரு நாள்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதனை இணைத்த முறைமையின் பிராகாரம் பிரியும்
என்பதை அரசியல் பிரதானிகள் நன்கே அறிவர்.அவ்வாறு பிரிகின்ற சந்தர்ப்பத்தில் தமிழ்
மக்களின் போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாமெ ன்பதை அறிந்து அதனைத்
தடுப்பதற்கான முன் கூட்டியேயான அரசினால் முன் வைக்கப்பட்ட யோசனையாகவும் இதனை
நோக்கலாம்.அவ் யோசனையின் பிரகாரம் அப்போது இணைத்திருந்தது போன்று வடக்கு,கிழக்கை
முற்றாக இணைக்காது,முஸ்லிம் சபையொன்றை அமைக்கும் சிந்தனைகளும் முன்
வைக்கப்பட்டிருந்தன.இந்த சிந்தனை இனப் பிரச்சினைத் தீர்விற்கான நியாயமான
தீர்வாகுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.இதில் ஆளுநர் அதிகாரங்களை மட்டும்
படுத்தும் வகையிலான யோசனைகளை இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் அரசிலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள்
இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.இவ் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் மக்கள்
கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கையும் வெளியாகியுள்ளது.இந்த அறிக்கையில் தமிழ்
அரசியல் கட்சிகள் பிரதனமாக முன் வைத்த
வடக்கு,கிழக்கு மாகாண இணைப்பை அந்தக் குழு நிராகரித்திருப்பதோடு இலங்கை
அரசியலமைப்பின் படி அது இணைய வழி வகுக்கும் அரசியலமைப்பின் ஏற்பாடும் மாற்றப்பட
வேண்டுமென்ற விதப்புரையை முன் வைத்துள்ளமை
தமிழ் அரசியல் கட்சிகளின் போராட்டத்தை இவ் விடயத்தில் பூச்சியத்தால்
பெருக்கியுள்ளது.இது முஸ்லிம்களுக்கு சார்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மத்திய
அரசின் அதிகாரப்பகிர்வு விடயத்தில் மாகாண சபை உறுப்பினர்களை அதிகம் உள் வாங்கிய இரண்டாம்
சபையை உருவாக்கும் யோசனையை அவ் அமைப்பு முன் வைத்துள்ளது.இவ் இரண்டாம் சபையானது
பாராளுன்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளதால் இச் சபையை உருவாக்குவதற்கான
யோசனை மிகவும் வரவேற்கத்தக்கது.இதில் முன் வைக்கப்பட்டுள்ள சிறு பான்மையினப்
பிரதிநித்துவம் பெரும் பான்மையினரை விட குறைவாக இருத்தல் ஆகாதென்பது சிறு
பான்மையினருக்கு சாதகமான தீர்வுத் திட்டமாகும்.அவ் அமைப்பு முன் வைத்துள்ள
இரண்டாம் சபையை தெரிவு செய்வதற்கான இரு முறைகளின் பிரகாரமும் பெரும் பான்மை
பிரதிநிதித்துவம் சிறு பான்மை பிரதிநிதித்துவத்திற்கு குறைவாக இருத்தல் ஆகாதென்ற
பரிந்துரையை நடைமுறை ரீதியாக நிவர்த்திக்குமா என்பது தான் வினாவைத்
தோற்றுவிக்கின்றது.
குறிப்பு: இக்
கட்டுரை இன்று திங்கள் கிழமை 20-06-2016ம் திகதி நவமணிப்
பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள்
இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு
அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.




