கிளிநொச்சி, யாழ்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் காரணமாக 1790 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 107 குடும்பங்களை சேர்ந்த 357 பேர் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கான குடிநீர் மற்றும் சமைத்த உணவு வசதிகளை அப்பிரதேச கிராம சேவகப் பிரிவு மற்றும் நகரசபைகள் ஒன்றிணைந்து வழங்கி வருகின்றன.
அதேவேளை இரணைமடு நீர்த்தேக்கம் உட்பட பல குளங்களில் நீர்மட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. நேற்றைய தினம் இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 28 அடியைத் தாண்டிய நிலையில் 5 வான்கதவுகள் ஒரு அடி உயரத்திற்கு திறந்து விடப்பட்டன.
என்றாலும் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இன்று காலை இரணைமடு நீர்த்தேக்கத்தின் அணைந்து வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தின் கொள்ளளவான 34 அடிகளில் 32 அடிகளுக்கு நீர்மட்டம் உயர்வடைந்தன் காரணமாகவே அணைந்து வான்கதவுகளும் ஒரு அடி உயரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன.
வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதனால், ஊரியான், பன்னங்கட்டி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, வெலிக்கண்டல், கேவில், ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தொடர்ந்தும் மழை இடைவிடாது பெய்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக அதிகரிந்து வருவதாகவும், அப்பிரதேச மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.(ஸ)




