யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியிலுள்ள கோட்டை பள்ளிவாசல் தினமும் மூடிக்கிடப்பதைக் காண முடிகின்றது. வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கருகில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் தொடர்பாக இதுவரை யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைக்கு தெரிவிக்கப்பட்டும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில் இப்பள்ளிவாசல் யாழ் முஸ்லீம்கள் சிலரினால் பராமரிக்கப்பட்ட நிலையில், திடீரென கைவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இப்பள்ளிவாசலுக்கு நிரந்தர மௌலவி ஒருவரோ நிர்வாகமோ இயங்குவதாகத் தெரியவில்லை. கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தனவந்தரினால் புனரமைக்கப்பட்டு சிறிது காலம் இயங்கி வந்தது. எனினும், தற்போது சில நபர்களின் சுயநலத்தினால் தினமும் மூடப்பட்டுக் காணப்படுகிறது. தினமும் பள்ளிவாசல் அருகேயுள்ள கோட்டையைப் பார்வையிட வெளி மாவட்ட பிரயாணிகள் வருகை தருகின்றனர்.
இவர்கள் தொழுவதற்கு சிரமங்களை எதிர்கொள்வதைக் காண முடிகின்றது. வறட்டுக் கௌரவத்திற்காக சில நபர்கள் குறித்த பள்ளிவாசலின் சொத்துக்களை தம்வசம் வைத்துக் கொண்டு தடுமாறித்திரிவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சில அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டமும் குறித்த பள்ளிவாசலில் காணப்படுகின்றது. எனவே, இப்பள்ளிவாசல் மீளவும் இயங்க ஆவண செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




