மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் மலேசியா நோக்கிப் பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதியின் மலேசிய விஜயத்தின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையிலான இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடப்படவுள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அந்த நாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்மஶ்ரீ பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பல்வேறு பரிமாணங்களை எட்டுவதாக ஜனாதிபதியின் மலேசிய விஜயம் அமையும் என்று நம்பப்படுகின்றது.
இதன்போது இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான வர்த்தக பரிமாற்றங்களை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக கோலாலம்பூரில் விசேட பொருளாதார மாநாடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த பொருளாதார மாநாட்டிற்கு அமைவாக உணவுக் கண்காட்சி ஒன்றும் இன்று நடத்தப்படவுள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் மலேசிய பிரதமர் மற்றும் மன்னரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.



