உலகிலேயே முதன்முறையாக கருப்பை திசுக்கள் நீக்கப்பட்ட பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையைப் பிரசவித்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் வசித்து வரும் துபாயைச் சேர்ந்த மோசா அல் மட்ரூஷி (Moaza Al Matrooshi) என்ற 24 வயது பெண்ணுக்கே, கருப்பை திசுக்கள் நீக்கப்பட்ட பின்னரும் குழந்தை பிறந்துள்ளது.
இந்தப் பெண் சிறு வயதில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டதால், பருவமடைவதற்கு முன்னதாக 9 வயதாக இருந்த போது, இவரது கருப்பையிலுள்ள திசுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு chemotherapy சிகிச்சைக்காக மருத்துவர்கள் இவரின் கருப்பை திசுக்களை நீக்க முடிவு செய்துள்ளனர்.
பின்னர், நீக்கப்பட்ட திசுக்கள் நைட்ரஜன் திரவத்தில் பனித்துகள்கள் போல் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பல்வேறு கட்டங்களாக நிகழ்ந்த சிகிச்சைகளால் அப்பெண் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்.
இப்பெண்ணுக்கு திருமணமான நிலையில், கடந்தாண்டு பதப்படுத்தப்பட்ட திசுக்களை மீண்டும் உயிர்ப்பித்து இளம்பெண்ணின் கருப்பையுடன் இணைத்து சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சிகிச்சையைத் தொடர்ந்து அவரது கருப்பையில் கருமுட்டைகள் வளரத் தொடங்கின.
குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கணவன், மனைவி காத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கருப்பையில் முட்டைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று போர்ட்லாண்ட் மருத்துவமனையில் IVR மூலம் அப்பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
மருத்துவ உலகில் முதன்முறையாக கருப்பை திசுக்கள் நீக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்ட திசுக்கள் மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்த முதல் தாயார் என்ற பெயரை மோசா அல் மட்ரூஷி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 




 
