தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்கள் ஆகிறது.
இதுவரையிலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தவிர அமைச்சர்களோ, முக்கிய பிரமுகர்களோ ஜெயலலிதாவை பார்த்ததாக தகவல்கள் இல்லை.
ராகுல் காந்தி, பொறுப்பு ஆளுநர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் மருத்துவர்களிடமே முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தனர்.
இந்நிலையில் இன்று அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், முதல்வருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. சுவாச சிகிச்சையை மருத்துவர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊட்டச்சத்தும், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரையிலும் முதல்வருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறிவந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இன்று நுரையீரல் அடைப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளதால் அதிமுகவினர் உட்பட பொதுமக்களும் கலக்கத்தில் உள்ளனர்.