இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தேசிய விளையாட்டு விழாவில் போட்டிகளின் முதல் நாள் இடம்பெற்ற போட்டிகளில் கிழக்கு மாகாண வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் அம்பாறை மாவட்டம் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இசட்.ரி.எம். ஆஸிக் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தனது முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் 42.34 மீற்றர் தூரத்தை எறிந்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன்,தென் மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களான நிரோஷன மற்றும் சதுரங்க ஆகிய வீரர்கள் முறையே 41.77 மீற்றர், 40.95 மீற்றர் தூரங்களை எறிந்து 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் கடந்த வாரம் நிறைவடைந்த 53ஆவது இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் இசட்.ரி.எம் ஆஸிக் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 43.78 மீற்றர் தூரம் எறிந்து தனிப்பட்ட சிறந்த காலத்தினைப் பதிவு செய்ததுடன், தங்கப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய ஆஸிக் பரிதி வட்டம் எறிதலில் 43.77 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தினைப் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியும் பட உதவியும் : Rishad Rishad Mohamed