கடந்த முதலாம் திகதி பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மு.கா கட்சிப்
போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமினால் வழங்கப்பட்ட தொழில்
விடயத்தினால் மு.கா மீது வெறுப்புற்று மு.கா தலைவரும் முரண்பட்ட போது அமைச்சர்
ஹக்கீம் அவ் விடத்தில் பஷீருடைய கதையை கூறியிருந்தார்.குறித்த இடத்திற்கும்
நிகழ்விற்கு பஷீரிற்கும் எதுவித சம்பந்தமுமில்லை.அவ் விடத்தில் பஷீரின் கதையை
இழுத்துப் போட்டுக் கதைப்பது அமைச்சர் ஹக்கீம் பஷீரினால் உள ரீதியாக
பாதிப்புற்றுள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இதனை நோக்கும் போது அமைச்சர் ஹக்கீம்
கனவிலும் பஷீரின் பெயரை உச்சரிக்கலாம்.
இதுவரை காலமும் அமைச்சர் ஹக்கீமுடன் மு.காவின் தவிசாளர் முரண்படும் போது
அமைச்சர் ஹக்கீமின் அந்தரங்கள் தான் வெளிவருமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.பாலமுனையில்
இடம்பெற்ற நிகழ்வை நோக்கும் போது அமைச்சர் ஹக்கீமினால் பஷீரின் அந்தரங்க
ஒப்பந்தங்கள் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அமைச்சர் ஹக்கீம் பாலமுனையில்
மு.காவின் தவிசாளர் பஸீர் பெசில் ராஜ பக்ஸவுடன் ஒப்பந்தம் செய்து மு.காவை தவறான
பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறியுள்ளார்.
எவ்வாறு தேசியப்பட்டியல் கிடைக்காமையால் பஷீர் அமைச்சர் ஹக்கீமின் விடயத்தில்
ஞானம் பெற்றி கேள்வி கேட்கின்றாரோ அது போன்றே பஷீர் சேகுதாவூத் அமைச்சர்
ஹக்கீமிடம் அவர் மாட்டிக்கொள்ளும் வகையிலான வினாக்களை தொடுக்கும் போதே அமைச்சர்
ஹக்கீம் கூட இவ் இரகசியத்தை கசிய விடுகிறார்.கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று
அடுத்த தேர்தலும் வந்துவிட்டது.இதுவரை காலமும் அவருக்கு கட்சியின் தவிசாளர் பதவியை
வழங்கி அழகு பார்த்த ஹக்கீம் தற்போது மாத்திரமேன் பஷீருக்கு எதிராக இவ்வாறு
கதைக்கிறார்.அவர் அமைச்சர் ஹக்கீமிடம் கேள்விக் கணைகளை தொடுக்க முன்பு அவரைக்
கண்டித்து கட்சியை விட்டு நீக்கிருக்கலாமே? 
அமைச்சர் ஹக்கீம் அக் குறித்த நிகழ்வில் அச் சந்தர்ப்பத்தில் மு.காவின்
தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஐந்து மு.காவின் உச்ச பீட உறுப்பினர்களையும் தன் கைக்குள்
வைத்திருந்ததாக குறிப்பிடுகிறார்.அவர்கள் யார்? அவர்களும் ஹக்கீமிற்கு எதிராக போர்க்
கொடி தூக்கும் போது தான் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் தான் இவர்கள் என
இணங்காட்டுவாரா? அல்லது அவ் ஐந்து உறுப்பினர்களையும் இதன் மூலம் அச்சுருத்தி
அடிபணிய வைக்க முயல்கிறாரா? கட்சிக்கு எதிராக போராடிய போது மௌனியாக இருந்த ஹக்கீம்
தனக்கெதிராக போராடும் போது இவற்றை வெளிப்படுத்தவது கட்சியின் நலனை கருத்திற்
கொள்ளாத அவரது சுயநல அரசியல் போக்கை எடுத்து காட்டுகிறது.இப்படியானவர் இரத்ததில்
முளைத்த மு.காவை வழி நடாத்த தகுதியானவரா?
அமைச்சர் ஹக்கீமிடம் பஷீர் தொடுக்கும் கேள்விகள் அனைத்தும் கடந்த காலத்தில்
நடந்தவை பற்றியல்ல.சமகாலத்தில் நடப்பவை,நடந்தவை ஆகியவற்றையே.அமைச்சர் ஹக்கீம்
கடந்த காலங்களில் நடந்தவை பற்றி கதைத்து பஷீரை வீழ்த்த முனைவது அமைச்சர் ஹக்கீமின்
இயலாமையை காட்டுவதோடு பஷீரின் கேள்விகளின் கனத்தையும் மட்டிட்டுக் கொள்ளச்
செய்கிறது.பஷீரின் கேள்விகளுக்கு அமைச்சர் ஹக்கீமிடம் பதில் இருந்தால் உடனுக்குடன்
பதில் அளித்தால் அவ்விடத்திலேயே அந்த வினாக்களை புதைத்து விடலாம்.இருப்பினும்
பஷீர் பெசிலுடன் ஒப்பந்தம் செய்ததாக அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளதற்கு பஷீர் பதில்
அளிக்க வேண்டிய கடமை உள்ளது.இதுவரை பஷீர் சேகுதாவூத் இது பற்றி எதுவும்
கதைக்கவில்லை.பஷீர் பதில் அளிப்பாரா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.




