Post views-

திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறக்குமாறு கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாண சபையின் 62வது சபை அமர்வு (25) இன்று தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது தனிநபர் பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்படி கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் இன்று மொத்த சனத்தொகை 1637236 ஐ அடைந்திருக்கும் நிலையில் 120 மாகாண வைத்தியசாலைகளும், 7மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளும்  உள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 45 பிராந்திய சுகாதார காரியாலயங்களும் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் மிகக்கூடுதலான நோயாளிகளும் கிழக்கு மாகாணத்திலே உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் மருந்துகளை கொள்வனவு செய்வதில் தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் கிடைக்காத மருந்தகளை கொழும்பு போன்ற தூர இடங்களுக்குச் சென்று கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதனால் குறித்த பிரதேசங்களில் அரச ஒசுசல மருந்தகங்களை திறப்பதற்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மருந்து விற்பனை நிலையங்கள் போதைப்பொருள் விற்பனை நிலையங்களாக மாறிவருகின்றன. இதனால் தற்போது கிழக்கு மாகாணத்தில் போதைவஸ்துப் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது. அதன்காரணமாக மனநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்துப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இது ஆரோக்கியமான விடயமல்ல இதனால் நோயாளர்களுக்கு போதிய திருப்தியும் காணப்படுவதில்லை ஆகவே மேற்குறித்த பிரதேசங்களில்  அரச ஒசுசல நிலையங்களை திறப்பதன் மூலம் போதைப் பாவனையிலிருந்தும் மக்களைப் பாதுகாத்துக்கொள்ளவதுடன் மக்களுக்கு திருப்திகரமான சேவைகளையும் வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்