ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை ஏற்கெனவே கொண்டுள்ள அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், றியோ ஒலிம்பிக்கின் நான்காவது நாளில் மேலுமிரு தங்கப் பதக்கங்களை வென்று, ஒலிம்பிக் போட்டிகளில் அவர் இதுவரை வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை, 21ஆக உயர்த்தினார்.
19 தங்கப் பதக்கங்களுடன் இம்முறை ஒலிம்பிக்கில் களமிறங்கிய அவர், 7ஆம் திகதி இடம்பெற்ற 4 x 100 மீற்றர் பிறீஸ்டைல் அஞ்சல் நீச்சலோட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். இந்நிலையில், இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்ற 200 மீற்றர் பட்டர்பிளை நீச்சலில், அவருக்குத் தங்கம் கிடைத்தது. இதன்போது, ஒரே வகையான நீச்சல் போட்டிகளில் இறுதிப் போட்டிகளுக்கு 5 தடவைகள் முன்னேறிய ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
2000ஆம் ஆண்டு, இப்பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான போதிலும், அதில் 5ஆவது இடமே கிடைத்தது. 2004இலும் 2008இலும் முதலிடத்தைப் பெற்ற அவர், கடந்த முறை, இரண்டாவது இடத்தையே பெற்றார். எனவே, கடந்த முறை இழந்ததை, இம்முறை மீளப் பெற்றுக் கொண்டார். பின்னர், 4 x 200 மீற்றர் பிறீஸ்டைல் அஞ்சல் நீச்சலோட்டத்தில் கலந்துகொண்ட அவர், அதிலும் தங்கம் வென்றார். இப்பிரிவில் அவர் வெல்லும் நான்காவது தொடர்ச்சியான தங்கம் இதுவாகும்.
இது, எந்த நிகழ்விலும் நீச்சலுக்கான உலக சாதனையாகும். பெல்ப்ஸின் சாதனைகள் இவ்வாறிருக்க, மற்றோர் அமெரிக்கரான செரினா வில்லியம்ஸுக்குச் சோதனையே காத்திருந்தது. உலகின் முதல்நிலை வீராங்கனையான அவர், ஒலிம்பிக்கில் நடப்புச் சம்பியனுமாவார். ஆனால், உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விற்டோலினாவை மூன்றாவது சுற்றில் எதிர்கொண்ட செரினா, 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் படுதோல்வியடைந்து வெளியேறினார். தோட்பட்டைக் காயம் காரணமாக அவதிப்பட்ட செரினா, தனது முழுமையான திறமையை வெளிப்படுத்தத் தவறியிருந்தார்.
அவரது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ், முதலாவது சுற்றில் வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாகத் தகுதிபெற்ற முதலாவது நீச்சல் வீரரான மத்தியூ அபேசிங்க (முன்னர் தகுதிபெற்றவர்கள், தெரிவுச்சீட்டு முறையில் தகுதிபெற்றவர்கள் ஆவர். இவர் மாத்திரமே, தகுதிகாண்பதற்கான பெறுபேறுகளை வெளிப்படுத்தித் தகுதிபெற்றவர்), தான் பங்குபற்றிய தகுதிகாண் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பெற்ற போதிலும், அரையிறுதிக்குத் தகுதிபெற முடியவில்லை.




