ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துகொள்ளும் ஆசிய நாட்டவர்கள் இலங்கையை யும் தளமாக பயன்படுத்துவதாக சர்வதேச பாதுகாப்பு பிரிவுகள் தொடர்ச்சியாக எச்சரித்துள்ளன. இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத ஊடுருவலை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கேரளாவைச் 17 பேர் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் இருந்து வந்த இரண்டு முஸ்லிம் நபர்களும் இலங்கையில் இஸ்லாமிய சமயக் கல்வியை கற்க வருவதாகக் கூறிய வந்துள்ளனர் என இந்தியாவின் புலனாய்வு துறை தற்போது தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பில் நாம் ஆராய்கிறோம்.
இந்நிலையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் ஆகியோர் இலங்கை பாதுகாப்பு தரப்பினை சந்தித்திருந்த நிலையிலும் இந்த காரணிகளை சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு மிகவும் அவதானத்துடன் செயற்படுவதாகவும், புலனாய்வு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மேற்கத்தேய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்து உள்ளன. தற்போது ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதம் தீவிரமடைந்து வருகின்றது. இந்தியாவில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்ட நபர்கள் தொடர்பில் செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் அடையாளம் காணப்படவில்லை.
எமது புலனாய்வு பிரிவினர் மிகவும் துல்லியமாக இந்த விடயங்கள் தொடர்பில் அவதானித்து வருகின்றனர். அது தவிர்ந்து எமது பாதுகாப்பு நடவடிக்களை பலமாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இலங்கைக்குள் இஸ்லாமிய பயங்கரவாத ஊடுருவல் ஏற்பட்டுள்ளதா இலங்கையும் அச்சுறுத்தலான சூழலில் உள்ளதா என்பது தொடர்பில் எமது புலனாய்வு பிரிவும் பாதுகாப்பு தரப்பும் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.




