கல்வியின் முக்கியத்துவம் அறியாதவர்கள் யாருமில்லை. உலகின் அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்களும் உண்டு. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை ஆக்கியிருக்கிறது.
பொருளாதார நோக்கிலே கல்வி ஒரு தொழில் (businesse), என்றும், ஒரு கைத்தொழில் (industry) என்றும் வளர்ச்சியடைந்து வருகிறது. உலகில் வேகமாக மாற்றமுறும் துறையாக கல்வியே உள்ளது. கல்வியைப் பணத்துக்கு வாங்கவும் விற்கவும் இன்று நடைமுறைகள் உண்டு. ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனி மதிப்பீடுகளை உலக அரசும் நிர்ணயித்துள்ளது. பணத்துக்காக பட்டங்கள் வழங்குகின்ற உள், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. காலி வீதியெங்கும் முளைத்திருக்கும் பிரிடிஷ் கொலேஜ், மலேசியன் கொலேஜ், என கல்விக் கடைகளும் பல பட்டங்களை வழங்குகின்றன (educational shops). இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களும், பட்டதாரிகளும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றார்கள். கல்வியிலும் காலாவதியாதல் (expire), புதிய கற்கைகள் தோன்றுதல் (new arrivals) என மாற்றங்களும் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன.
அண்மைக் காலம் முதல் அரச பல்கலைக்கழகங்களும் கணிசமான வெளிவாரிக் கற்கைகளை வடிவமைத்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழு (UGC) வலியுறுத்தி வருகின்றது.
கல்வியறிவற்றவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும், உலகும், நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் புதுவடிவில் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. கல்வியிலே புதிய கண்டுபிடிப்புக்கள் பெருகுவது போல், குற்றங்களும் பல புதிய புதிய வடிவங்களில் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. மது – போதை வஷ்து அதிகரித்தல், இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ஆபாசம், சிறுவர் துஷ்பிரயோகம், அரச பயங்கரவாதம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சுரண்டல் ஆகியவற்றுடன் கணனிக் குற்றங்களும் (cyber crimes), கூட்டான பாலியல் வல்லுறவுகள் (gang traps), என கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இது போன்ற செயல்களில் கற்றவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கூட ஈடுபடுகிறார்கள் என்பதுதான் வேதனை. அத்துடன் கல்வி ஏன் மனிதனை நல் வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் எழுவது நியாயமே.
அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது நல்வழிப்படுத்த உதவியது. ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் கருதி குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். படிப்புடன் பல்வேறு வாழ்க்கைக் கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள்.
அடுத்து இந்திய முகலாய ஆட்சியோடு ‘மதரஸா’ கல்விமுறை அறிமுகமானது. அதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. அதிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நந்நெறி மிக்கவராகவே இருந்ததால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொண்டார்கள். காலப்போக்கிலே மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன.
மெக்காலேயின் (Maculay) கல்விக் கொள்கையூடாக ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது.
"We must do our best to form a class who may be interpreters between us and the millions we govern - a class of persons, English in taste, in opinion, in Morals and in intellect"
" நாங்கள் எங்களது கல்வி முறையின் மூலம் ஒரு வர்க்கத்தை உருவாக்குதல் வேண்டும் அவர்கள் எங்களுக்கும், நாங்கள் ஆட்சிபுரிகின்ற இலட்சக்கணக்கான மக்களுக்குமிடையில், எங்கள் கருத்துக்கள், சிந்தனைகளை விளக்குபவர்களாக இருப்பார்கள். விருப்புக்கள் கருத்துப்கள், ஒழுக்கம், அறிவு என்பவற்றில் அவர்கள் ஆங்கிலேயர்களாகவே இருப்பார்கள்." என்றார் Maculay.
ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் தொடர்ந்தும் பின்பற்றினோம். அதன் பரிநாம வளர்ச்சியைத் தான் கலைத் திட்டமாகத் தொடர்ந்தும் பிரயோகித்து வருகிறோம். இதிலிருந்து கல்வி செய்யும் ஒழுக்கமரபை அவர்களின் கல்வி முறை இந்தப் பிராந்தியத்திலே ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இந்தக் கல்வித் திட்டத்தில் மனித நந்நெறிகளுக்கான வழிகாட்டல்கள் இருந்தாலும், எமது பரீட்சை மையச் சூழல், இயந்திரமயமான வாழ்வியல், அவற்றை மாணவர்களிடமிருந்து பறித்தெடுத்து விட்டன. பல்கலைக்கழக இடநெருக்கடி காரணமாக எழுந்த போட்டி மேலும் கல்வியை தனிநலன் சார் தன்மைக்குள் தள்ளிவிட்டுள்ளது.
மனிதன் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய வேண்டிய நற்கருமங்கள் என்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் ஆத்மீக மேம்பாடு (spiritual development) பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியைப் புகட்டுதலுடன் மட்டும் தனது கடமையை இக் கல்வித்திட்டம் நிறுத்திக் கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப்படியாக தரம் இறங்கி மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் போலியான சுதந்திரத்துடன் உலாவர ஆரம்பித்து விட்டது. அதன் பிரதி விளைவுகளை உலகு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கல்வி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் நேர்வழியில் செலுத்தத் தவறியதால் முழு சமுதாயமும் சீர்கேடுகளில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.
நெறிகெட்ட கல்வியின் விளைவுகள்
இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் கெசினோ, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா, அபின், ஹெரோயின் போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர்களின் சாம்ராஜ்யங்கள், கள்ள நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை பெரிய திரைகளிலும், சின்னத்திரைகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டிதொட்டிகளிலுள்ள பாமர மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்த்த பெருமை நிச்சயமாக இந்திய திரைப் படங்களையும் தொலைக் காட்சிகளையுமே சாரும்.
இளைய சமுதாயத்தின்
தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.
தீர்வு என்ன?
தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம்.
நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷொக்ஸ், புத்தகப்பை, சாப்பாட்டு பொக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும்.
கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடு, கண்ணியம் போன்றன காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் வருந்துகின்றனர். உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. வெள்ளம் அடித்துச் சென்ற பின் அணை பற்றிப் பேசி என்ன பயன்.
நெறிசார்ந்த கல்வி
எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும் (Value Based Education).
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் பெறுபேறு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர்களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி ஆசிரியர்களே. ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயற்பட்டு மாணவர்களுக்கு மாதிரி (models) ஆக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிகமான பயிற்சிகளை கொடுத்தேனும் அரசு பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடாத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக, நாட்டின் நற்குடிமக்களாக, பெற்றோரைப் பேணுபவர்களாக, சுற்றத்தாரை மதிப்பவர்களாக, அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக, தேசத்தை நேசிப்பவர்களாக, இயற்கைக்குத் தீங்கு செய்யாதவர்களாக (nature friendly), காலநிலையை நேசிப்போராக (ecologically life) உருவாக்க முடியும்.
அதைத்தான் நாம் வாழ்நாள் கல்வி (life long education) என்று அழைக்கலாம். தேசமும், முழு உலகமும் எதிர்பார்க்கும் பிரஜைகள் உருவாகும் கல்வி முறைமையும், கலைத் திட்டமுமே எமது தேவை. வெறும் பொருளுலகை (material world) மையமாகக் கொண்ட கலைத் திட்டத்தால் அதைச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.




