Post views-

கஷ்மீர்: ஒரு முற்றுகை தேசம்

தென் ஆசியா இன்று உலகளாவிய ரீதியில் என்றும் இல்லாதவாறு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஆகையால் அதன் அரசியல் பொருளாதார சமூகவியல் துறைகள் அதிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. அந்த வகையில் தென் ஆசியாவின் மிக நீண்ட கால முரண்பாட்டைக் கொண்ட பிரச்சினையாக கஷ்மீர் பிரச்சினை காணப்படுகிறது.
கடந்த ஐம்பது வருடங்களாக இந்தியாவும் பாகிஸ்தானும் கஷ்மீருக்காக யுத்த களத்திலும் பேச்சுவார்த்தை மேசைகளிலும் மோதுண்டு வருகின்றன. இவ்விரு நாடுகளும் கஷ்மீரை தமது எல்லைக்குள் அல்லது தமது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வருவதற்கு மோதிக் கொள்கின்றன. அரை நூற்றாண்டை கடந்துவிட்ட இந்த முரண்பாடும் தமது நிலத்திறகான மக்கள் போராட்டமும் கஷ்மீர் பிரச்சினையை சர்வதேசரீதியாக பிரபல்யம் அடைய வழிவகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.
புவியியல்
வடக்கில் சீனா, கிழக்கில் திபெத், தெற்கில் இந்திய ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், மேற்கில் பாகிஸ்தான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள பிரதேசமே ஜம்மு கஷ்மீராகும். இது ‘பூலோக சுவனம்’ என வர்ணிக்கப்படுகிறது.
சனத்தொகை
இந்திய ஆக்கிரமிப்பு கஷ்மீரின் மக்கள் தொகை சுமார் 8 மில்லியன். பாகிஸ்தான் ஆசாத் கஷ்மீரில் சுமார் 9 மில்லியன். அகதிகளாக சுமார் 1.5 மில்லியன் காஷ்மீரிகள் வாழ்கின்றனர். மொத்தமாக சுமார் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
1,51,360 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 63 சதவீதம் இந்தியாவின் கீழுள்ளது. 37 சதவீதம் ஆசாத் கஷ்மீராக பாகிஸ்தானுடன் உள்ளது.
வரலாறு
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் கஷ்மீர் இருந்துள்ளது. 1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது கஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்றுவிட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார்.
குலாப் சிங் 1857ல் இறந்தார். றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹாராஜ்ஜாக்கள் அவரை அடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தனர் என்றே கூற வேண்டும். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர். 1931ல் ‘டொக்ரா படுகொலைகள்’ மூலம் முஸ்லிம்களை இவர் அடக்கினார்.
பல்வேறு தேசங்களாக இருந்து வந்த இந்தியா என்னும் உபகண்டம், சுதந்திரம் பெற்றபோது கஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயேதான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங்  (தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையார்) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார்.
கஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.
ஆட்சியாளர் இந்தியாவுடனும், மக்கள் பாகிஸ்தானுடனும் சேர வேண்டும் என எதிர்-எதிர் விருப்புக்கள் தோற்றம் பெற்றதே பிரச்சினையின் அடிப்படையாகும். தனது கொடுங்கோண்மையை மேலும் பலப்படுத்த, மக்களின் விருப்புக்கு எதிராக 1947 அக்டோபர் 26ல் ‘சுயாட்சி’ அடிப்படையில் இந்தியாவுடன் ஹரிசிங் சேர்ந்து கொண்டார். இந்திய படையினரை அழைத்து கஷ்மீர் மக்கள் மீதான தனது பிடியை இறுக்கிக் கொண்டார். அடுத்து இந்தியாவும், பாகிஸ்தானும் யுத்தத்தில் இறங்கின.
இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து பாகிஸ்தான் இராணுவமும் கஷ்மீருக்குள் ஊடுருவின. கடைசியில், கஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறியது. அதனை ஆக்கிரமிப்பு கஷ்மீர் (Pakistan Occupeid Kashmir-POK) என்று இந்தியா கூறியது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.
.நா வில் கஷ்மீர் விவகாரம்
கஷ்மீர் மீதான உரிமைக்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் போட்டியிட்டன. 1948 ஜனவரி 1ஆம் தேதி அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு கஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மானம் (எண் 47) நிறைவேறியது. அதன்படி, இருநாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும். அவரவர் ஊடுருவிய பகுதியிலிருந்து இருநாட்டு இராணுவமும் வெளியேறவேண்டும் என அத்தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால், இது நிறைவேறவில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், கஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு அவர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பது என்று ஐநா சபையில் ஒப்பந்தமானது.
  1. காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா?
  2. பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது
  3. தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா?
என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மஹாராஜா ஹரிசிங் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஐ.நா. சபையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.
இந்நிலையில், கஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லாஹ். அவருக்கு ஐ.நா.சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொது வாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. ஆனால், நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தது.
பாகிஸ்தான் தன்னுடைய இராணுவத்தை விலக்கிக் கொண்டால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியா கூறியது. நேருவுடன் ஷேக் அப்துல்லாஹ் நட்பு பாராட்டியதாலும், இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததாலும் கஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என பாகிஸ்தான் கூறியது. உலகநாடுகளின் தலையீட்டில் இருதரப்பு இராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.
ஆனால், கஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொது வாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கைகழுவியது.
அதே நேரத்தில் கஷ்மீரைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. கவனம் செலுத்தியும் வருகிறது.
கஷ்மீர் போராளிக் குழுக்கள்:
1989 வரை ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக கஷ்மீரில் தோற்றம் பெறவில்லை. ஆயுதப் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை 93,379 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவப் பாதுகாப்பில் வைத்து கொல்லப்பட்டவர்கள் 6,974 பேர். அழிக்கப்பட்ட, தீவைக்கப்பட்ட வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளின் எண்ணிக்கை 1,05,866. விதவைகள் 22,734. அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் 1,07,366. கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு, மானபங்கத்திற்கு உட்பட்ட பெண்கள் 9,946 பேர். கஷ்மீர் மீடியா சேவை இத்தகைய தகவல்களை நாளாந்தம் வழங்கி வருகிறது..
கஷ்மீர் விவகாரத்தில் தற்போது குறிப்பாக ஆறு தரப்பினர் களத்தில் குதித்துள்ளனர்.
  1. ஆயுதப் போராட்டக் குழுக்கள்
  2.  பிரிவினைவாத சுதந்திர ஹுர்ரியத் தலைவர்கள்
  3. இந்திய சார்பு கஷ்மீர் அரசியல் கட்சிகள்
  4. இந்தியா
  5. பாகிஸ்தான
  6. மனித உரிமை அமைப்புகள்.
“1989 ஆம் ஆண்டு வரை பொறுமையுடன் நிராயுதபாணியாக எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு கோரி வந்தோம். தேர்தல்களில் மோசடிகளைச் செய்து, இந்தியா தான் விரும்பியோரை பொம்மை ஆட்சியாளர்களாக எம்மீது திணித்து தனது ஆக்கிரமிப்பை பலப்படுத்தி வருகிறது. எனவே, ஆயுதப் போராட்டமே வழி” என்கின்றன ஆயுதப் போராட்டக் குழுக்கள்.
இவர்கள் ஏழு இலட்சம் இந்திய இராணுவத்திற்கு எதிராக சண்டையில் குதித்துள்ளனர்.
அடுத்து  ஹுர்ரியத் சுதந்திரக் கட்சிகளே கஷ்மீர் விவகாரம் மீண்டும் சர்வதேச அரங்கில் முன்னணிக்கு வர பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 “ஐ.நா. சபையும் முன்னால் இந்தியப் பிரதமர் நேருவும் எமக்கு வாக்களித்த, எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய சுயநிர்ணய உரிமை எமது பிறப்புரிமை. இந்தியா வழங்கும் பொருளாதார பொதிகளுக்காக, கண்துடைப்புகளுக்காக எமது பிறப்புரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். சுயநிர்ணய உரிமைக்கான சர்வசன வாக்கெடுப்பு நேர்மையாக நீதியாக இடம் பெறும் வரை ஆயுதமின்றி அமைதியான போராட்டத்தைத் தொடர்வோம். இப்பணியில் இதுவரை கொல்லப்பட்டு, ஷஹீதானவர்களின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்பது ஹுர்ரியத் தலைவர்களின் நிலைப்பாடாகும்.
 “மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் உட்பட ஏனைய பகுதிகளிலும் இந்தியப்படையினர்  குவிக்கப்பட்டிருப்பதே மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகும். அவர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும். எவரையும் கைது செய்யும், எங்கும் புகுந்து தேடும் விஷேச இராணுவ அதிகாரம் நீக்கப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். சுதந்திர சார்பு தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். கஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினை என ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது மாத்திரமே இந்திய அனைத்துக் கட்சிக் குழுவுடனோ, இந்திய அரசுடனோ பேச்சுவார்த்தைக்கு செல்வோம்” என ஹுர்ரியத் அமைப்பினர் முடிவாகத் தெரிவித்து வருகின்றனர்.
 நிலவரம் அபாயமான கட்டத்தை அடையும் போது மாத்திரம் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வரும். அந்த இடைவெளியில் தனக்குரிய இலாபங்களை எட்டிக் கொள்ளும். பின்னர் காஷ்மீரிகள் மீது பழைய ஆக்கிரப்புக் கொள்கைகளையே தொடரும் என்பதும் இவர்களது வாதமாகும்.
 கஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வின்றி இந்தியாவுடன் உறவுகள் வழமைக்கு வரமாட்டாது என்பது பாகிஸ்தானின் நிலைப்பாடு. முன்னால் பகிஸ்தான் ஜனாதிபதி முஷாரஃப் –  முன்னால் இந்திய பிரதமர் வாஜ்பேயி தலமையிலான சமாதானப் பேச்சுக்கள் 2004 ஜனவரியில் ஆரம்பித்தன. கஷ்மீர் ஹுர்ரியத் பிரதிநிதிகளை மூன்றாம் தரப்பாக பேச்சுக்களில் பங்குபெற இந்தியா அனுமதிக்கவில்லை. 2008 நவம்பர் மும்பை தாக்குதலை அடுத்து, நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் இன்னும் உரிய முறையில் துவக்கப்படவில்லை. காஷ்மீரிகள் உண்மையில் பாதிக்கப்பட்டே உள்ளனர். ஐ.நா. சபையும் இந்தியாவும் அவர்களுக்கு வாக்களித்துள்ள நிலையில் அவர்களுடன் பேசி அவர்களுக்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். பிராந்தியத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் காஷ்மீரிகளுக்குரிய சுயநிர்ணய உரிமையை அலைக்கழித்து வருகிறது.
1947 ஆகஸ்ட் 14 இந்திய உப கண்டம் பிரிக்கப்பட்ட தினம். பாகிஸ்தான் – இந்தியா என இரு நாடுகளாகப் பிரிவதற்கான உண்மையான அடிப்படை ஒழுங்கே சர்வசன வாக்கெடுப்பாகும்.  இதனை ஆழ்ந்து நோக்கும் எவரும் ஓர் உண்மையைப் புரிந்து கொள்வார். மக்களின் விருப்பின் அடிப்படையிலேயே இப்பிரிவினை ஏற்பட்டது என்பதே அவ்வுண்மை.
சிற்றரசர்கள் (Princely States) எடுக்கும் தீர்மானமானது நடைமுறையில் பெரும்ன்மை மக்களை வைத்தே மேற்கொள்ளப்பட்டது. ஹைதராபாத் டெக்கான் மக்களுள் பெரும்பான்மையினர் இந்துக்கள்; ஆட்சியாளர்கள் முஸ்லிம் நவாப்கள். அவர்கள் இந்தியாவுடன் சேர்ந்து  கொண்டனர்.
இதே நடைமுறை காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 80%  பெரும்பான்மை முஸ்லிம்களின் விருப்பை சிறுபான்மை ஆட்சியாளரான ஒருவர் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
மோடி- கஷ்மீர் பிரச்சினை
ராமர் கோவில், பொதுசிவில் சட்டம், கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து போன்ற சிறுபான்மையினரின் உணர்வுபூர்வமான முக்கியப் பிரச்னைகளை மையப்படுத்தி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – சங்பரிவார் குழுக்களின் அரசியல் பிரிவான பா.ஜ.க அதி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது. ‘125 கோடி மக்களுக்கும் பிரதமர்’ என்று சூளுரைத்த நரேந்திர மோடி இந்திய நாட்டின்  அதிபட்ச அதிகார செங்கோலை கையிலெடுத்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதத்தில் என்று சொல்வதைவிட சங்பரிவார் குழுக்களின் நீண்ட நாள் திட்டத்தொகுப்பிலிருந்து ஒவ்வொறு கொள்கையாக வெளியில் எடுத்து செயல்படுத்தும் விதமாக அந்தந்த துறைச் சார்ந்த அமைச்சர்கள் தற்போது, அரசியல் விளையாட்டைத் துவக்கியுள்ளனர்.
ஆக்கிரமிப்புக்குள்ளான கஷ்மீர் மக்கள் தமது சுய நிர்ணய உரிமை மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க, இந்தியா சர்வசன வாக்கெடுப்பை  நடத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை 1948 ஆம் ஆண்டு 38, 39, 47 ஆகிய சரத்துகளினூடாக தீர்மானம் வெளியிட்டிருந்தும். 66 வருடங்களாக வாக்குறிதிகள் நிறைவேற்றப்படாமைக்கு நியாயங்களை எங்கே தேடுவது?
இந்த அவலக் குரல் 125 கோடி மக்களுக்கு தலைமையேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எட்ட வேண்டும் என்பதே அனைவரினதும் அவாவாக இருக்கிறது.
–  அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்
நன்றி
  1. அப்துல் மலிக் ஏ. கஷ்மீர் வரலாறும் எதிர்காலமும் (இணைய கட்டுரை)
  2. மார்க்ஸ் பேரா. கஷ்மீர் என்ன நடக்கிறது அங்கே?
  3. ஆலிப் எஸ்.எம் கஷ்மீர் முடிவற்ற முரண்பாடு வெளியீடு அரசியல் விஞ்ஞான சங்கம் SEUSL
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்