வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் சம அந்தஸ்துள்ள தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணம் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையும் சந்தர்ப்பம் ஏற்படுமானால் சம அந்தஸ்துள்ள தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சிரேஷ்ட அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 60வது அமர்வு தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில்(21) நடைபெற்றது. இதில் “புதிய அரசியலமைப்புக்கான தீர்வுத் திட்ட முன் மொழிவுகள்” கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபையினை கோரி தனிநபர் பிரேரனை சமர்ப்பித்து உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்…..
புதிய அரசியலமைப்பு தீர்வுத் திட்டம் தொடர்பாக நமது நாட்டில் பல்வேறு விதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள. கடந்த 03 தசாப்த காலமாக போரினால் பாதிக்கப்பட்டு நியாயமான அதிகாரப் பகிர்வைக் கோரி நிற்கும் வட – கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் வட மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு, புதிய அரசியல் அமைப்பு யாப்பிற்கான முன் மொழிவுகளை வட மாகாண சபையில் சமர்ப்பித்து இம் மொன்மொழிவுகள் மீதான விவாதம் வட மாகாண சபையில் முழுமை பெற்று, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு வட மாகாண சபையால், மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளில் மலையக மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தன்னாட்சி பிராந்தியங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் முஸ்லிம் சமூகத்தினரிடமோ, முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமோ எவ்விதமான ஆலோசனைகள் பெறாமல் தன்னிச்சையாக முஸ்லிம் சமூகம் தொடர்பான தீர்மானத்திற்கு வந்தமை குறித்து முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கவலையடைந்துள்ளது.
தமிழ்; தேசிய கூட்டமைப்பினர் வட – கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், முஸ்லிம்கள் கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்துடன் இணையக் கூடாது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர் சிங்கள மக்களையும் இணைத்து புதிய அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
எது எப்படியிருந்தாலும் வட மாகாண சபை வட மாகாண மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையில் யோசனைகளை சமர்ப்பித்துள்ளது. துரதிஷ்டவசமாக கிழக்கு மாகாண சபையும், மக்கள் பிரதி நிதிகளும் இணைந்து கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளை யோசனையாக தயாரிக்க இதுவரை
எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் மாகாணமாக வட மாகாணம் அமைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் மூவின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கிழக்கு மாகாண சபை அதனுடைய முன்மொழிவுகளை தயாரித்து நமக்கான நியாயமான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படும் இத்தீர்மானங்கள் நமது நாட்டில் வாழும் பல்லின மக்கள் மத்தியில் ஐக்கியம், அமைதி , பரஸ்பர புரிந்துணர்வுகளை கட்டியெழுப்பக் கூடிய வகையில் அமைய வேண்டும்.
கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள் என எனக்கு புரியாமல் உள்ளது. எமது தேசிய காங்கிரஸ் கட்சி புதிய அரசியலமைப்பு சட்டம் பின்வருமாறு திருத்தியமைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளது.
மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தற்போதுள்ளது போன்றே தொடர வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான மாகாண சபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையிலேயே தொடர்ந்தும் நடாத்தபடல் வேண்டும். இனம், மதம், மொழி போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் குழுக்களுக்கிடையிலான குரோதங்களையும், வன்முறைகளையும் தூண்டும் விதமான பேச்சுக்கள் நடவடிக்கைகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அரசியல் அமைப்பின் மூலம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணையக் கூடாது. ஏதாவது சந்தர்ப்பத்தில் அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு உடன்படுமாயின் அச் சந்தர்ப்பத்தில் சம அந்தஸ்த்துள்ள தமிழர்களைப் பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும் அமையப் பெறும் விதத்தில் மாகாணங்களின் எல்லைகள் திருத்தியமைக்கப்படல் வேண்டும். இலங்கையன் என்ற அடையாளத்தை முதன்மைப் படுத்தி ஒவ்வொரு பிரஜையும் இன, மத, மொழி நம்பிக்கை சார்ந்த அடையாளங்களுக்கு குந்தகம் இல்லாமல் சம அந்தஸ்த்துடன் சுதந்திரமாக வாழ்வதற்கான சகல உத்தரவாதங்களையும் அரசியல் அமைப்பினூடாக வழங்குதல் வேண்டும் என மேலும் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
(எம்.ஜே.எம்.சஜீத்)




