Post views-

பெருநாளைக்கு உடுப்பு வாங்கும் கடினமும் - பயனுள்ள ஆலோசனைகளும்

உலகில் எல்லாக் கலாசாரத்தையுடைய மக்களுக்கும் பெருநாட்கள் உண்டு. அவரவர் முறைக்கேற்ப கொண்டாடி மகிழ்கிறோம். பலகாரம் செய்தல், மத அனுட்டானங்கள், கையூட்டம், வினோதப் பயணங்கள் அத்துடன் புதிய ஆடை அணிதலும் முக்கியமான ஒன்றாகும்.
முஸ்லிம்களுக்கு ஈதுல் பித்ர்(நோன்புப் பெருநாள்), ஈதுல் அள்ஹா(ஹஜ்ஜுப் பெருநாள்) எனப் பிரதானமாக இரண்டு பெருநாட்களேயுள்ளன. மீலாதுன் நபி விழாவும் உண்டு. அதைச் சிலர் கொண்டாடுவதைத் தவிர்க்கிறார்கள்.
வீதி எங்கும் துணிக் கடைகள் நிரம்பி வழிந்தாலும், பெருநாளைக்கு குடும்பத்தோடு துணிமணி வாங்குதல் என்பது ஒரு கடினமான விடயமாகவே எல்லோராலும் உணரப்படுகிறது.
நுகர்வோருக்கு விருப்பமான ஆடைகளை விட வியாபாரி தனக்கு முடியுமானதை இந்தியா, பெங்கொக்கிலிருந்து கொண்டு வந்து குவித்து, அவற்றை மக்களுக்குத் திணித்தலே இங்கு நடைமுறையாக மாறி விட்டது.
பல விற்பனைப் பிரதிநிதிகளை கடை நிரம்பவும் வைத்துக் கொண்டு நுகர்வோரைச் சூழ்ந்து ஆடையில் இல்லாத விடயங்களை இருப்பதாகச் சொல்லித் தலையிலே கட்டி விடும் கைங்கரியத்தை கடைகள் மிகவும் இலாவகமாகச் செய்கின்றன. அதிலும் நுகர்வோர் "பெண்கள்" எனின் ஏதாவது பளபளக்கும், மினுமினுக்கும் தரம் குறைந்த ஒன்றை எடுத்து வெளியிலே போட்டு மனதை மாற்றி அதிக விலைக்கு விற்பது கடைகளுக்கு மிக இலகுவான காரியமாக உள்ளது. தங்கள் மனச்சாட்சிகளைக் கொன்று விட்டு வியாபாரம் செய்யும் இவர்கள் புதிய பணக்காரர்களாக மாறி வருகிறார்கள். இவர்கள் நோன்பு காத்தில் பல இஸ்லாமிய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கும் நல்ல காரியத்திற்கும் எம்மிடமிருந்து உழைத்த இலாபத்தைச் செலவிடுகிறார்கள் என்பது ஆறுதலானதே.
இறுதியில் நோன்பைப் பிடித்துக் கொண்டு படிகள் பல ஏறித் தரமற்ற ஆடைக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எமக்கு. உடுத்தி ஓரிரு நாட்களில் மங்கிவிடுவதால் கொடுக்கும் பணத்துக்கு உரிய பலன் கிடைக்காது மனம் வருந்துகிறோம். இங்கு ஆச்சரியமான விடயம் விலை கூடிய பொருட்களை மக்கள் "தரமானது" என்று தவறாக நினைக்கிறார்கள். இதனால் அதிக விலைக்கு வாங்கும் பொருளைப் பெருமையாக கருதுகிறார்கள். சந்தர்ப்பத்தை வியாபாரிகள் சரியாகப் பயன்படுத்துவதோடு அவர்களின் கடைகளை வானழாவ உயர்த்தியும், புதிய கிளைகளை அமைத்தும் கோடீஸ்வரர்களாக மாறி வருகிறார்கள். "நான்கு மாடி, ஐந்து மாடிக் கட்டிடங்கள் வாருங்கள்" எனக் கூறி விளம்பரம் செய்து எம்மை மேலும் மடையர்களாக்குகின்றார்கள்.
நினைக்கும் போது புதுமையாக உள்ளது. பெருநாள் நெருங்க நெருங்க விலையும் அதிகரித்து "நாளை பெருநாள்" என்றதும் திடீரென மிகவும் குறைந்த விலைக்கு விற்றுத் தீரத்து விடுகிறார்கள்.

இங்கு நாட்டின் நுகர்வோர் சட்டங்களோ, வணிக, கொடுக்கல் வாங்கல் சட்டங்களோ செயற்படுவதைக் காண முடிவதில்லை. மனம் போன போக்கில் வியாபாரம் நடக்கிறது. "புத்திவான் பலவான்" என்பதனடிப்படையில் விற்பனை நடைபெறுகிறது. ஒரே வகையான பொருளைப் பல நுகர்வோருக்கும் பல விலைகளுக்கு விற்கும் முறை இங்கே சர்வசாதாரணம். கொஞ்சம் வாயாடி நுகர்வோர் வென்றுவிடுகிறார்கள். எந்தப் பொருளிலுமே விலையுடன் குறியீடுகளும் இட்டே வைத்திருக்கிறார்கள். விலைக்குப் பதிலாக ஆங்கில எழுத்தை இட்டிருக்கிறார்கள். நுகர்வோர் விலையைக் கேட்கும் போது "ஆட்களுக்கு ஏற்ப" குறியீட்டைப் பார்த்தே விலை சொல்கிறார்கள். 12500/=, விலையிடப்பட்ட ஒரு சல்வரை 3000/= வுக்கும் 1500/= வுக்கும் விற்கிறார்கள். இவர்களின் இலாப எல்லை (profit margin) என்ன என்று குழப்பமாக உள்ளது. இது உண்மையில் ஒரு மோசடியே. இவ்வாறு வியாபாரம் செய்ய இந்த நாட்டிலே முடியுமா? நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி இது தவறாகாதா? பாதையோரக் கடைகளிலும் நல்ல ஆடைகளை மலிவு விலையில் வாங்கலாம். அதில் தரக் குறைவு ஏன் நமக்கு.
துணிமணி வாங்கும் எமது கவனத்திற்கு

1) பெருநாள் நெருங்கும் வரை காத்திருக்காது முன்கூட்டியே வாங்குதல்

2) குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே நாளில் வாங்காது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குதல்
3) புதிய வரவுகள் (latest), புதிய திரைப்படம் (தறி), சீரியல் பெயர்களை முற்றாக புறக்கணித்தல்
4) சிறியவர்களுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித் தனிக் கடைகளைத் தேர்ந்தெடுத்தல்
5) சனநெரிசலில் ஆடை வாங்குவதைத் தவிர்த்தல், cotton துணிகளைத் தெரிதலும், நைலோனைத் தவிர்த்தலும்
6) எதிலும் பெரிய கம்பனிகளின் பொருட்களை வாங்குதல் (branded items), எமது நாட்டு உற்பத்திகளை வாங்குதல்
7) தெரிவின் போது தனக்குப் பிடித்த ஆடை இதுதான் எனினும் அதைப் "பிடித்துவிட்டது" என்பதை வெளிப்படையாக சொல்லாமல் வேறொன்றைப் பற்றிப் பேரம் பேசுதல், பிறகு "இது எவ்வளவு" என்று எழுமாறாக கேட்டு அதை வாங்குதல்
8) பெரும்பாலும் எமது ஊர்களிலேயே வாங்குதல். ஏனெனில் இதே பொருள்தான் நகரத்திலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்
9) பெண்களை அழைத்துச் செல்வதைத் தவிர்த்தல்
10) விலையைக் கூடுதலாக குறைத்துத் தரும் கடைகளை விட நியம விலைக் (fixed price) கடைகளை நாடுநல்
11) நாம் எந்த brand, எந்த நிறம், எமது அளவு, என்பதைத் திட்டமாக தீர்மானித்தே கடைக்குள் செல்லுதல். கடைக்குள் நின்றுகொண்டு தடுமாறல் கூடாது
12) பல கடைக்குள் ஏறி இறங்காது நல்ல கடையைத் தீர்மானித்துச் செல்லுதல் நல்லது. அல்லது பல கடைக்குள் ஏறி வந்தால் அதைக் கடைக்காரனுக்கு விளங்காது இருக்க வேண்டும்
13) ஆடைகளைக் கண்டு வாய் ஊறல் கூடாது. நிதானமாக கொள்வனவு செய்யவும், அலங்கார, சீக்குஞ் வேலைப்பாடுகளைத் தவிர்த்தல்
14) முறண்டு பிடிப்போர், பேராசைக்காரர்களைக் கூட்டிச் செல்வதைத் தவிர்க்கவும்
15) வாகனம் உள்ளவர் எனின் பலர் சேர்ந்து கொழும்புக்குச் சென்று மொத்தமாக வாங்கி வருவதும் நல்லதே
16) பெண்கள் ஆடைகளை அணிந்து அளவு பார்க்கும் (fit on) போது அங்கு பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கமராவைவும் (cctv) அவதானி்பது நல்லது
17) மொத்தத்தில் புதிய வரவு, இந்த பெருநாள் டிசைன், boss ட மகனும் எடுத்திருக்கார் போன்ற பசப்பு வார்த்தைகளை நம்பவே வேண்டாம்.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்