Post views-

இயக்கம் வளர்க்க வேண்டியது, எமது இலக்கும் இல்லை, கடமையும் இல்லை..!!

-ஜெமீல் எம் சஜா (கபூரி)-

இஸ்லாம் சமூக நல்லினக்கத்தினை போதிக்கின்ற, எதிர்பார்க்கின்ற ஓர் மார்க்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், அதே நேரம் சமூக நல்லினக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைகள் தகர்த்தெறியப் படுவதனையோ, இஸ்லாமிய அகீதாக்கள் கழைந்தெறியப் படுவதனையோ இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. எமது நாட்டைப் பொறுத்த வரை நாம் சிறுபான்மையினர், மாற்று மதத்தினர் எம்மை தவறாக எண்ணி விடக் கூடாதென்று சொல்லிக் கொண்டே இன்று பல்வேறுபட்ட மார்க்கத்திற்கு முரணான காரியங்களினை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

தூர நோக்கில் சிந்திக்கின்றோம்; சமூக அக்கறையில் சிந்திக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு ஏதோ இஸ்லாம் தூர நோக்கு சிந்தனையினை, சமூக அக்கறையினைக் கற்றுத் தராதது போல் வெறுமனே புத்தி ரீதியாக மாத்திரம் சிந்தித்துக் கொண்டு இன்று எம்மில் சிலர் இஸ்லாத்திற்கு மாற்றமாக செயற்படுவதுடன் பிரசாரமும் செய்கின்றார்கள் ஏதோ அவர்கள் மாத்திரம்தான் இலங்கை முஸ்லிம்களில் அக்கரை கொண்டவர்கள் போல். ஏகாதிபத்திய வாதிகளுக்கு வக்காளத்து வாங்குகின்றார்கள், மேற்கத்திய நாடுகளின் திருப்திக்காக ஆட்சி நடாத்துகின்றார்கள் என்று இஸ்லாமிய நாடுகளின் ஆட்சிகளினை விமர்சிக்கின்ற, ஆட்சியாளர்களிடம் குறைதேடுகின்ற அதே நபர்கள்தான் இங்கு, இன ஒற்றுமை என்ற பெயரில் இஸ்லாத்தின் கடைமைகளையும் கடப்பாடுகளையும் பலிக் கடாவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

யாருக்காகவும் எதற்காகவும் எமது மார்க்கத்தினை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது “உங்களது மார்க்கம் உங்களுக்கு; எங்களது மார்க்கம் எங்களுக்கு” (109:6) எதை விட்டுக் கொடுக்க வேண்டும்; எதை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது தெரியாமல் அனைத்தையும் இன்று திரந்து விட்டிருக்கின்றார்கள்.

“நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்கவும் வேண்டாம் தெரிந்து கொண்டே உண்மையை மறைக்கவும் வேண்டாம்” (2:42) என்றிருக்க இவ்வாறு சமூக ஒற்றுமை பேசும் கூட்டம் ‘வைக்கல் கட்டில் படுத்த நாய் போன்று’ தானும் சத்தியத்தினை மக்களுக்கு சொல்லாமல் சொல்பவர்களினையும் சொல்ல விடாமல் இஸ்லாமிய தஃவாக் களத்தில் உள்ள சில இயக்கங்களினை விமர்சிப்பதனைப் பாரக்கின்ற போது வேடிக்கையாவே இருக்கின்றது. ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்தும் வகையில்தான் மார்க்கப் பிரசாரம் செய்ய வேண்டும் என்றிருந்தால் இஸ்லாம் இந்தளவிற்கு வளர்ந்திருக்காது என்பதனை இவர்களும் பெரும்பாலும் இவர்களது மூளைச் சலவைக் கருத்துக்களுக்கு இலக்காகியிருக்கும் சில கல்விமான்களும் பல்கழை, உயர் தர மாணவர்களும் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை.

சமூக நல்லினக்கம், ஆட்சி அதிகாரம், சமூக ஒற்றுமை என்று கோஷம் போட்டு இஸ்லாமிய வரலாறுகளினையும் சில திருமறை வசனங்களினையும் தங்களது கருத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் இவர்களுக்குத் தெரியாதா, இஸ்லாத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுகள்; இல்லை தெரிந்தும் மறைக்கின்றார்களா? யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன உலகமே எதிர்த்தாலும் உயிர்தான் போனாலும் யாருக்காகவும் எதற்காகவும் இறைவனின் தூதினை மறைக்காமல் சமூகத்தினை ஒன்று திரட்டி மலையேறி நின்று இறைத் தூது சொன்ன நபியவர்களின் வரலாற்றை மறைத்து ஹுதைபிய்யா உடன்படிக்கையின் விட்டுக் கொடுப்பினையும் இறுதிக் கட்ட மதீனா ஆட்சியையும் மட்டும் இன்று பாடம் நடாத்தும் இவர்களுக்கு, மக்காவில் சத்தியத்தை பகிரங்கமாய் சொன்னதற்காய் குலைந்து போன சமூக ஒற்றுமையும்; கொல்லப்பட்ட உயிர்களும்; உடமைகள் கழைந்து, நாடு துறந்த பயணங்களும் குடும்பங்களே சீர் குலைந்து, சின்னா பின்னமானதையும் ஏன் இவர்கள் சொல்வதில்லை.

இஸ்லாத்தின் பெயரால் இணை வைப்புக்களும் மூட நம்பிக்கைளும் அத்வைதங்களையும் அரங்கேற்றும் மார்க்க விரோதிகளை விட்டு, இஸ்லாம் விரோத செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை மட்டும் ஏன் இன்று வசைபாட வேண்டும்? ‘தலைமைத்துவம் இல்லாத கூட்டம்; உங்களுக்குள்ளே ஆயிரம் பிரிவுகள்’ என்று எங்களை விமர்சித்து விளக்கங்கள் சொல்லும் நீங்கள், வெளிப்படையில் பார்ப்பதற்கு நாங்கள் குழப்பவாதிகள்தான்… உள்ளே வந்து இஸ்லாத்தின் நிழலில் நின்று பாருங்கள் எங்களுக்குள் ஏன் இத்தனை பிரிவுகள் என்று புரியும்.

இயக்க ஒத்துமை வேண்டும்; இயக்கம் வளர வேண்டும் என்று தலைவர் சொல்கின்றார் என்பதற்காகவோ மூத்தவர் சொல்கின்றார் என்பதற்காகவோ கண்மூடித் தனமாக பிறர் கருத்துக்களை ஏற்று இயக்கம் வளர்க்க வேண்டியது எமது இலக்கும் இல்லை; அது எமது கடமையும் இல்லை. நாங்கள், எங்களது இயக்கத்தினை வளர்க்க சேர்ந்த கூட்டமில்லை இஸ்லாத்தினை வளர்க்க சேர்ந்த கூட்டம். ஆகையால் கண்மூடித் தனமாக ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இஸ்லாம் போதிப்பது போன்று எதுவாக இருந்தாலும் தீர ஆராய்கின்றோம் ஆய்வுகளின் முடிவுகள் ஒருவருக் கொருவர் மாறுபடலாம்; ‘அது சரி என்றால் இரண்டு கூலி, பிழை என்றால் ஒரு கூலி’ இதுதான் இஸ்லாத்தின் வழிகாட்டுதலே தவிர, உங்களைப் போன்று இயக்கம் வளர்க்க கண்மூடித் தனமாய் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க இஸ்லாம் போதிக்க வில்லை.

நாங்கள் ஒன்றும் சமூக ஒற்றுமை, நிம்மதியான வாழ்வு, அமைதியான சூழல், ஏன் இஸ்லாமிய ஆட்சி, அதிகாரத்திற்கு கூட எதிரானவர்களல்ல. எங்களது முயற்சிகளின் கடைசி இலக்குக் கூட இவைகளை நோக்கியதாகவே இருக்கின்றது. ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எங்களது இலட்சியப் பயணத்திற்கு அல்குர்ஆன் ஸுன்னா பாதை அமைத்துத் தருகின்றது அதனால் எம்மால் இஸ்லாத்தில் விட்டுக் கொடுப்புக்கள் செய்ய முடியவில்லை. நாம் உங்கள் கண்களுக்கு குழப்பவாதிகளாகத் தெரிகின்றோம். உங்களுக்கு குர்ஆன் ஸுன்னாவை விட நீங்கள சமூக சீர்திருத்த வாதிகளாகப் பார்க்கின்ற நீங்கள் உதாரணப் புருஷர்களாக்கிக் கொண்ட சில மனிதர்களின் கருத்துக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றது. அதனால் இஸ்லாத்தில் விட்டுக் கொடுப்புச் செய்கின்றீர்கள். நீங்கள் சமூக அக்கறையாளர்களாகத் தெரிகின்றீர்கள் அவ்வளவுதான்.

சமூக ஒற்றுமை, நிம்மதியான வாழ்வு கிடைப்பதற்காக நீங்கள் ஆயிரம் ஆயிரம் வழிகளினைப் பின்பற்றலாம். ஆனால் நாங்கள் பின்பற்றுவது ஒரே ஒரு வழிதான். அதைத்தான் நபியவர்களும் பின்பற்றி, நடைமுறைப் படுத்தி வெற்றியும் கண்டார்கள்.

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.” (24:55)

நாங்கள் தேடுகின்ற பயமில்லாத, நிம்மதியான, அமைதியான வாழ்வும் ஆட்சி அதிகாரமும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் ஈமான் கொண்டு, இறைவனுக்கு இணை வைக்காமல், நல்லமற்கள் செய்ய வேண்டும் இவை இரண்டினையும் நடைமுறைப் படுத்தினால் இவை அனைத்தும் நமக்கு தானாகக் கிடைக்கும் என்பது தான் அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ்வின் வாக்குறுதி ஒருநாளும் பொய்யாகாது. மூடநம்பிக்கைகள் அனைத்துமே இணை வைப்பு. இவைகள் முதலில் கழையப்பட வேண்டும்.  நல்லமல் செய்வதென்றால் இறை திருப்தியும் (இஹ்லாஸுடன்) ஸுன்னாவும் பின்பற்றப்பட வேண்டும். ஸுன்னா பின்பற்றப் படுவதென்றால் “பித்அத்” ஒழிக்கப்பட வேண்டும். இதைத்தான் நாம் செய்கின்றோம். இணைவைப்பை எதிர்க்கின்றோம் பித்அத்தைத் தடுக்கின்றோம். இறைவனின் வாக்கினை நம்புகின்றோம். இதை நீங்கள் குழப்பவாதி என்றால், சமூக அக்கறை அற்றோர் என்றால், நீங்கள்தான் குழப்பவாதிகளும் சமூக அக்கறை, அல்லாஹ்வின் வாக்குறுதியில் நம்பிக்கை அற்றோரும்.

தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் எங்கள் இலக்கு இறைவனின் வாக்கை நோக்கியது. இதில் ஒருபோதும் நாம் பின்னிக்கவும் மாட்டோம் இயக்கம் வளர்க்க உள்ளே ஒன்றாய் வெளியே ஒன்றாய் பசுத்தோல் போர்த்திய புலியாய் வேசம் போடவும் மாட்டோம். இயக்கத்திற்கு ஆள்சேர்க்கவும் மாட்டோம். நாம் இறைவனை மட்டுமே நம்பிய கூட்டம்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்