கடுமையான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கும் பாரியளவில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எமது பிணங்களின் மீதேறி வன்முறைகள் மூலம் தேர்தலை வெற்றிகொள்ள மஹிந்த ராஜபக்ஸ முயற்சிக்கின்றார் என்றால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களை படுகொலை செய்து ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சித்தால் அது, வரலாற்றில் இடம்பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியை கொலை செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியீட்டினார் என வரலாற்றில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி வரையில் கடுமையான உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர், காவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் இதுவா ஜனநாயகம் என தாம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார். தாக்குதல்களின் போது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.(ஜே)



