மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பெருவெளிப்பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் கடந்த 2017.05.29ஆந் திகதி இனந் தெரியாதவர்களால் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி பாடசாலையில் கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அப்பிரதேச தமிழ் மக்களால் கட்டி வைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் மீற்கப்பட்டு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவரும் கடந்த 06.06.2017-செவ்வாய்க்கிழமை மூதூர் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுமியர்களால் அடையாளம் காண்பதற்காக அடையாள அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது இருந்தபோதும் சிறுமியர்களால் இவர்கள் ஐவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டனர்.
பிரதேச தமிழ் மக்கள் தமக்கு நியாயம் கோரி பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைய நடாத்தி வந்த நிலையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கிலல்லாமல் இச்சம்பவம் தொடர்பாக பலர் முஸ்லிம் சமூகத்தினை சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட விதத்தில் மிக மோசமான முறையில் விமர்சித்து வந்ததை அவதானிக்க முடிந்தது.
முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்ட முற்பட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் குற்றமற்ற ஐவரையும் விடுவிக்க வேண்டும் எனக்கோரியும் மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் கண்டண அமைதிப்பேரணி ஒன்றினை 07.06.2017ஆந்திகதி ஏற்பாடு செய்து நடாத்தியது.
பேரணியின் இறுதியில் மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் தோப்பூர் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
இதன் பிற்பாடு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு சமூகங்களையும் சார்ந்த முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜனார்த்தனன் மற்றும் நாகேஸ்வ்ரன், மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், மூதூர் - தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் கருத்து தெரிவிக்கையில்
குற்றத்தை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன் விசேடமாக பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு இட்டிருப்பதாகவும் அவற்றுக்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் ஒரு தனி நபர் செய்த குற்றத்திற்காக ஒரு சமூகத்தை சார்ந்தவர்களை விமர்சிப்பது இனமுருகளை ஏற்படுத்துவதுடன் பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி போராட்டங்களை நடாத்துவது பெற்றோர்களே தமது பிள்ளைகளின் கல்வியை சீர்குலைக்கின்ற செயற்பாடாகும்.
அத்தோடு, திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு மட்டக்களப்பு மற்றும் ஏனைய பகுதிகளில் போராட்டங்களை நடாத்துவது பொருத்தமற்ற செயல் அவற்றினூடாக இனமுறைகளை ஏற்படுத்தும் ஒரு முறையாகவே தெரிகிறது. இதனூடாக இன்று தோப்பூர் மற்றும் மூதூர் பிரதேசங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன. இரண்டு சமூகமும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தால் உண்மையான குற்றவாளியை கைது செய்வதறக்கான வழிவகைகள் கை நழுவிப்போகலாம் அவற்றை கை விடும்படி இரு சமூகத்தை சார்ந்தவர்களிடமும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இவ்விடயம் தொடர்பாக மாவட்ட பொலிஸ் மா அதிபர் கருத்து தெரிவிக்கையில்
பாலியல் துஸ்பிரயோகம் செய்த பகுதியில் இருந்த குற்றவாளியின் இந்திரியம் டி என் ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 12.06.2017ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உண்மையான குற்றவாளி யார் என்பதை இனம் கண்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பாக இரு சமூகத்தை சார்ந்தவர்கள் குற்றவாளியை கண்டு பிடிக்க உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்விடயம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்
தமிழ் சமூகத்தை சார்ந்தவர்கள் தமக்கான நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் நிரபராதிகள் தண்டிக்கபடக்கூடாது என்பதுடன் குற்றம் செய்தவர்கள் மாத்திரமே தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கருத்து தெரிவிக்கையில்
சிலர் தமிழ் முஸ்லீம் உறவை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவற்றில் இருந்து இரு சமூகமும் அவதானமாக இருப்பதுடன் கடந்த மூன்று தசாப்த யுத்தம் காவு கொள்ளப்பட்டு மீண்ட நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல் பட இரு சமூகத்தவர்களும் செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், உண்மையில் குற்றவாளி எந்த இனமாக இருக்கட்டும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.