மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நேற்று 2017.05.21-ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் காபட் இட்டு புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 25 கிலோ மீற்றர் நீளமான வீதிகள், 5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி நூராணியா சுற்று மதில், 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட காத்தான்குடி ஆற்றங்கரைப் பூங்கா மற்றும் தலா 3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட காங்கயனோடை ஆற்றங்கரைப் பூங்கா, பாலமுனை சிறுவர் பூங்கா, செல்வ நகர் கிழக்கு ஆரையம்பதி சிறுவர் பூங்கா என்பன அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன், 2.25 மில்லியன் செலவில் மட்டக்களப்பு பாலமுனை பிரதேசத்திலுள்ள நடுவோடை கடற்கரைப்பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடியில் 2.25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பொது மலசலகூடங்களுக்கு அடிக்கல் நடப்பட்டன.
மேலும், 20 மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர் பூங்காக்கள், உடற்பயிற்சி நடைபாதை, நீண்ட வாகனத் தரிப்பிடம், இருக்கைள் என்பனவும் அன்றைய தினம் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாருக் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினூடாக இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக், அமைச்சரின் இணைப்பாளர் யூ.எல். முபீன் உள்ளிட்ட அமைச்சின் முக்கியஸ்தர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.







