அச்ச சூழ்நிலை காரணமாக தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறிய அரச உத்தியோகத்தர்களுக்கு மீள் நியமனம் வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று (20) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த யுத்த காலத்தின் போது அரச உத்தியோகத்தர்கள் ஆயுதப்படைகள் மற்றும் சில இயக்கங்களின் அச்சுறுத்தல் காரணமாக தங்களது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வெளிநாடு சென்றிருந்தனர். அவர்கள் இப்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமாதான சூழ்நிலையில் தங்களது உறவுகளோடு சேர்ந்து தாய் நாட்டில் வாழ்வதற்கும் விரும்புகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அந்த உத்தியோகத்தர்கள் விண்ணப்பங்களைச் செய்கின்ற போது அவர்கள் மீது கருணைகொண்டு மீள் நியமனம் வழங்குவதற்கான அவகாசத்தினையும், உதவிகளையும் வழங்குவதற்கு பொதுச்சேவை ஆணைக்குழு முன்வர வேண்டும்.
அதேபோன்று கடந்த காலங்களில் புனித ஹஜ் கடமைக்காக சென்றவர்கள் அப்பயணத்தினை மேற்கொள்வதற்காக விடுமுறை கோருகின்ற போது அந்த விண்ணப்பப் படிவங்கள் திணைக்களத் தலைவர்களினூடாக ஆளுநருக்கு செல்லுகின்ற போது ஏற்படுகின்ற தாமதங்கள் காரணமாக பல அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் அவர்கள் அக்கடமையினை நிறைவேற்றிக்கொண்டு வந்ததன் பின்னர் அறிவிக்காமல் சென்றதாகவும், விடுமுறைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்து பல அரச உத்தியோகத்தர்கள் தங்களது பதவிகளையும் இழந்துள்ளனர்.
எனவே புனித மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் சென்று தங்களது தொழில்களை இழந்த உத்தியோகத்தர்கள் மீதும் பொதுச் சேவை ஆணைக்குழு கவனம் செலுத்தி அவர்களுக்கும் மீள நியனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் பற்றிய பல குறைகளை கடந்த காலங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த சபையிலே பேசியிருந்தார். அத்துடன் கடந்த காலங்களில் முதலமைச்சர் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக ஆளுநரைச் சாடுவதனையும், ஆளுநர் முதலமைச்சரை சாடிய நிகழ்வுகளையும் பார்க்கக்கிடைத்தது. இவ்வாறாள செயற்பாடுகள் எமது மாகாணத்திற்கு ஆரோக்கியமானதல்ல இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்த அரசியல் தலைவர்கள் முதலமைச்சரும், ஆளுநரும் ஒன்றினைந்து செயற்படுவதனூடாகவே இந்த மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்திருந்தனர்.
அதே போன்றுதான் கடந்த காலம் பத்திரிகைகளைப் பார்க்கின்ற போது பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றினை விட்டிருந்தார். அவர்களும் அதற்கு எதிராக ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தனர். ஒரு அரசியல் வாதியும் அதிகாரியும் சண்டை பிடிக்கின்ற நிலமைகளையும், பத்திரிகைகளில் அறிக்கை விடுகின்ற சம்பவங்களையும் பார்க்கின்ற போது கவலையாகவுள்ளது. இவ்வாறான நிலமைகளில் இருந்து நமது மாகாணத்தைப் பாதுகாக்க வேண்டும். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




