புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று கருத்துத் தெரிவித்தார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் ஐந்தாவது நினைவு தின நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இவ்விடயங்கள் பற்றிக்கூறினார்.
தொழிற்சங்க பிரதிநிதியாகவும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராகவும் செயற்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டு இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு தின நிகழ்வு கொலன்னாவையிலுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
எனது தந்தையின் கொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும், அவரினால் மாத்திரம் இதனைத் தனியாகச் செய்ய முடியாது. பாதுகாப்பு இன்றி அவரினால் இதனை செய்திருக்க முடியாது. அத்துடன், அவருக்கு சத்திரசிகிச்சை வழங்கிய வைத்தியர் தொடர்பில் பாரிய சந்தேகம் சமூகத்தில் இருக்கின்றது. அன்றிருந்தபொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் சந்தேகம் நிலவுகின்றது. அத்துடன், இந்த சம்பவத்தின் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்பதும் சமூகத்தில் இருக்கும் சந்தேகம் ஆகும். இது குறித்து ஆராயுங்கள். மஹிந்த ராஜபக்ஸ அன்று எனது தந்தையை சரியாகக் கவனித்திருந்தால், கொலன்னாவையில் அவருக்கு அவமரியாதை ஏற்பட்டிருக்காது. அவருக்காக அனைத்து இடங்களிலும் பேசினார். இறுதியில் புதிதாக வந்த ஒருவர் காரணமாக பழைய பாரதவை, பழைய லக்கியை அவர் மறந்து விட்டார்.
தனது எதிர்கால அரசியல் தீர்மானங்கள் தொடர்பிலும் பாரளுமன்ற உறுப்பினர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலா, அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலா அரசியலை தொடர்வீர்கள் என பலரும் என்னிடம் கேட்கின்றார்கள். எனது இரத்தத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பது தொடர்பில் எதிர்காலத்தில் பார்க்கலாம். எவ்வாறாயினும், நாம் இடதுசாரி குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்லவா?