எம்.ஜே.எம்.சஜீத்
உலக முஸ்லிம்களின் உவகையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் எனது வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகினடறேன்.
பெற்று வளர்த்து பிரியமுடன் நேசித்த பிள்ளை மீதான பாசத்தை விட படைத்துப் பரிபாலித்து பக்குவமாய் வழிகாட்டிய வல்ல இறைவனைப் பயந்து பாலகனைப் பலியிடுமாறு கிடைத்த இறைகட்டளையை இதய சுத்தியுடன் நிறை வேற்றத் துணிந்த நபி இப்றாஹிம் (அலை) அவர்களதும் இளம் பராயத்திலேயே இறையச்சம் நிறைந்த இதயத்துடன் தந்தையின் பணியைத் தவறாது நிறைவேற்றத் தயவுடன் பணிந்த தனயன் இஸ்மாயீல் (அலை) அவர்களதும் தியாகங்களை நினைவு படுத்துவதாகவே ஹஜ்ஜுப் பெருநாள் நிலைத்திருக்கிறது.
அவா, அழுக்காறு, பெருமை, பேராசை போன்றவற்றால் மனங்கள் மாசுறும் போது கோபம், குரோதம் என்பன ஊற்றெடுக்க மனிதர்களுக்கிடையில் பிணக்குகளும், பிரச்சினைகளும் பெருகி பிரிவினை உருவாக சாந்தி, சமாதானம் என்பன சீர்குலைந்து விடுகின்றன. அதனால் மனித சமூகம் அமைதியிழந்து அதைத்தேடி பரிதவித்து அலைகிறது.
இறையச்சமும் தியாக உணர்வுமே இத்துர்க்குணங்களை அகற்றி மனிதனைப் புனிதனாகத் தூய்மைப் படுத்துகிறது. இதனால் பொறுமை, அன்பு, மன்னிப்பு, மனிதநேயம் என்பன மனங்களில் மலரவும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகவும் வழி செய்கிறது.
ஆகவே தியாகத் திருநாளாகிய இவ் ஹஜ்ஜுப் பெருநாளில் முஸ்லிம்கள் தமது சகல துயரங்களிலுமிருந்து விடுபட்டு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மேலும் பொதுவாக உலகத்திலும் குறிப்பாக இலங்கை திருநாட்டிலும் வாழும் சகல இன மக்களும் தங்களுக்கிடையிலான கசப்புணர்வுகள், பேதங்கள் மறந்து விட்டுக்கொடுப்புடனும் அன்புடனும் அளவளாவி அமைதியும் சமாதானமும் தழைத்தோங்கி ஒற்றுமையாக வாழ நாம் ஒவ்வொருவரும் இத்தியாக திருநாளில் திடசங்கற்பம் பூனுவோமாக




