தியாகத்தினதும் ஐக்கியத்தினதும் நல்லிணக்கத்தினதும் உன்னதமான படிப்பினையை ஒவ்வொரு வருடமும் எமக்கு நினைவூட்டும் ஹஜ் நிகழ்வானது உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் ஒற்றுமை சகவாழ்வு மற்றும் அதன் மூலம் வெளிப்படும் ஆன்மீக ஒளியை சிறப்பாக எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சகவாழ்வுடன் வாழ்வதற்கும் தியாக உணர்வுடன் தம்மிடம் காணப்படும் வளங்களை ஏழை எளியவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்குமான ஹஜ் கிரியையினை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் சமயத்தின் உள்ளடக்கம் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி நம் அனைவருக்கும் பெறுமதியான செய்தியை வழங்குகிறது.
அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து உலக சமாதானத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாழ்வின் நிலையற்ற தன்மையை நினைவுபடுத்தி மதக் கிரியைகளில் ஈடுபடும் சர்வதேச மாநாடு என்று ஹஜ் கடமையைக் கருதலாம்.
ஒருவரின் செல்வம் அதிகாரம் பதவி அல்லது அந்தஸ்து என்பவற்றை விட மனித நேயமே முக்கியமாகும் என்பது இங்கு சிறப்பாக வெளிப்படுகிறது.
ஹஜ்ஜின் ஆன்மீகப் பெறுமானங்கள் அனைத்து உலக மக்களையும் மிகவும் சிறப்பானவர்களாக மாற்றுவதற்குப் பங்களிப்பு செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன் அனைத்து முஸ்லிம்களுக்கும் இன்பகரமான ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க
பிரதமர்




