ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஓரினச் சேர்க்கை காதலர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு புரபோஸ் செய்து ஒருவரை ஒருவரை கட்டியணைத்து முத்த மழை பொழிந்த ரொமான்ஸ் காட்சி அனைவரையும் கலகலக்க வைத்தது.
பிரேசில் மகளிர் அணி நேற்று ரக்பி போட்டியில் ஆடியது. இந்தப் போட்டிக்கு பிறகு தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.
இந்த போட்டியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மகளிர் ரக்பி அணியின் வீராங்கனை இசடோரா பங்கேற்றார்.
இதை அவரது ஓரினச் சேர்க்கை காதலரான இனியா ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார். இவர் நேற்று போட்டி நடந்த டியோடோரா மைதானத்தில் மேனேஜராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் இசடோராவை நெருங்கிய இனியா, மைக்கை எடுத்து அனைவரும் பார்க்க முழங்காலிட்ட படி இசடோராவிடம் புரபோஸ் செய்தார்.
இதைப் பார்த்து கூட்டமே ஆரவாரித்தது. இசடோரா தான் என் வாழ்க்கை, என் அன்பு, என் காதல்.. எல்லாமே என்று உருகியபடி கூறினார் இனியா.
நேற்றைய போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற தவறியது. இருப்பினும் இசடோராவுக்கு அந்தக் கவலையை மறக்கடித்து விட்டது இனியாவின் இந்த இனிய புரபோசல்.
ஒலிம்பிக் முடிந்து போகலாம். ஆனால் இதுதான் எங்களுக்குத் தொடக்கம். எங்களது ஓட்டம் இனிமையாக தொடரும் என்றார் இசடோரா.
இப்படி ஒலிம்பிக் மைதானத்தில் வைத்து திருமணத்திற்குப் புரபோஸ் செய்த முதல் ஓரினச் சேரக்கை ஜோடி இதுதான்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 42 ஓரினச் சேர்க்கையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.




