Post views-

இலங்கைச் சூழலில் பொது மூன்றாம் நிலைக் கல்வி : அரச கவனக் குவிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் பொதுக் கல்வியை (common education) பாடசாலைகளூடாக அரசு கட்டமைத்து சாதி, மத, பால் வேறுபாடின்றி யாவருக்கும் வழங்கி வருவது சிறப்பானதாகும். வசதிகருதி இனங்களுக்குத் தனித்தனிப் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கென்றும் பாலிகா பாடசாலைகளும் செயற்படுவது எமது நாட்டின் பொதுக் கல்வியின் சிறப்பம்சமாகும். இந்த சிறப்பு நிலை மூன்றாம் நிலைக் கல்வியில் இல்லாதிருக்கிறது. இலங்கையிலே 93.6% மான மாணவல்கள் பாடசாலைக்கு நுளைந்தாலும் அதில் 3.6% மான மாணர்களே மூன்றாம் திலைக் கல்வி பெறுகிறார்கள். பெருந்தொகையானோர் மறைந்து போய் வழி தவறி விடும் நிலை எமது நாட்டிலே உள்ளது.
இலங்கை அரசியல் யாப்பின் படி நாட்டின் பிரஜைகள் அனைவரும் கல்வி பெறுவது அனைத்து தரப்பு மக்களினதும் அடிப்படை உரிமையாகும். உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் 17% மாத்திரம் அரசின் 14 பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுகிறார்கள். 83% மாணவர்களுக்கான மூன்றாம் நிலைக் கல்வி (Tertiary Education) வாய்ப்பு இலாமல் வழிதவறிப் போவதென்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகும். இவர்களுக்கு வழிகாட்டுவதும் ஆட்சியிலுள்ள அரசின் தலையாய பொறுப்பேயாகும்.
இலங்கையில் வருடாந்தம் 325000 பாணவர்கள் முதலாமாண்டில் சேர்ந்து அதிலே வெறும் 25000 பேருக்கு மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கிறது. சித்தியடையும் பெரும்பாலான மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் அம்மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான இட ஒதுக்கீட்டை அரசால் வழங்க முடியாதிருக்கிறது.10144 பாடசாலைகளில் படித்த மாணவர்களுக்கு 14 பல்கலைக்கழங்களும் ஒரு திறந்த பல்கலைக்கழகமும் போதுமா? என்ற நியாயமான வினா எழுவது தவிர்க்கவியலாததாகும். இம்மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை இலவசக் கல்வியூடாக அழைத்து வரும் அரசு, வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டிய தருணத்தில் கைவிட்டுவிடும் அவலம் உள்ளது. ஒவ்வொரு மாணவனுக்குமான கட்டிடம், தளபாடம், புத்தகம், சீருடை, ஆசிரியர், கல்வித் துறை ஊழியர்களுக்கான சம்பளம் என பெரும் தொகைப் பணத்தை செலவு செய்யும் அரசு இடையில் கையை விரிப்பது விந்தையாக உள்ளது.
உண்மையில் இது தனிப்பட்ட மாணவர்களுக்கான ஓர் இழப்பன்றி, இந்த நாட்டுக்கேயான பொருளாதார ரீதியான பாரிய இழப்பாகும். பெருந்தொகைப் பணம் நாசமாகும் செயலாகவே எமது இலவசக் கல்விக்கான செலவு உள்ளது.
பல்கலைக்கழக கல்வியைக் கணிசமான மாணவர்க்கு கொடுப்பதற்கு பணம் அரசிடம் இல்லாமலுள்ளது என்பதிலும், அரசின் அக்கறை குறைவாகவுள்ளது என்பதே இங்கு புலப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் போன்று மாணவர்களிடம் பணம் பெற்று பல்கலைக்கழக வசதிகளை அபிவிருத்தி செய்து வாய்ப்பு கிடைக்காமல் போகும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வசதியை அரசால் வழங்க முடியும். அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களை விட குறைந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு சகாயக் கட்டணத்தில் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதற்கும் புதிய கட்டிடங்கள், ஆளணி என்பன வேண்டுமே.
2007 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பின் படி வைத்திய துறையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு அவர்களின் கற்கைக்காக இந்த நாட்டு மக்கள் 15 லட்சம் ரூபாய் மறைமுக வரிச்சுமையை சுமக்கின்றனர். இவ்வரிச்சுமையை தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் மாணவர்களிடம் திரும்ப பெறும் முறை ஒன்றை அரசால் அறிமுப்படுத்தவும் முடியும். இல்லையெனில் 5 வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு கிடைக்கும் "இறக்குமதி தீர்வையற்ற" வாகனத்தை விற்பனை செய்துவிட்டு கிடைக்கும் பணத்தின் மூலம் இக்கடனை ஒரே தடவையில் திருப்பி செலுத்தும் முறையையும் அரசால் அறிமுகப்படுத்தலாம். தீர்வையற்ற வாகனத்தை 60 லட்சத்துக்கு வாங்கும் இவர்கள் வெளியில் விற்பனை செய்வது 100 லட்சத்துக்கு. இதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் சுத்த லாபம் 40 லட்சம். அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள், வைத்தியர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனம் மற்றும் அதன் நிதிச்சுமையை மறைமுகமாக மிதிவண்டியில் செல்வோரும் வாகனமே இல்லாமல் கால்நடையாக பாதையில் செல்லும் அடிமட்டத்தினர் மீது சுமத்தப்படுகிறது.
வறுமையில் வாடும் மாணவர்கள் தவிர்ந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விரும்பும் பணக்கார மாணவர்களிடம் அதற்கான பணத்தை பெற்று பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளலாம். பாடநெறிகளை சர்வதேச தரத்துக்கமைய வடிவமைத்தால் வெளிநாட்டு மாணவர்களும் பணம் செலுத்தி கல்வி கற்பதற்கு இங்கு வருவார்கள். பல்கலைக்கழக கல்வி முறைமையை மாற்றித் தரமாக கொண்டுவர முதல் எதிரி அந்த குறித்த பீடத்தின் விரிவுரையாளர்களே. காரணம் அவர்களின் பழைய கல்வி முறை மாற்றமுற்றால் முதலில் வேலை இழப்பது அவர்களே. அல்லது தங்களைப் புதிய கல்வி முறைமைக்குள் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களை ஏற்கவேண்டும். அல்லது வெளிநாட்டு விரிவுரையாளர்களுக்கு வழி விட்டுத் தாங்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டி வரும். இவற்றைச் செய்யும் நிலையில் பல்கலைக்கழக மூதவை இப்போதைக்கு இல்லை.
இதனால் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளை போன்று இங்கு பல்கலைக்கழக கல்லூரிகளை (university college) அமைத்து உயர் தரத்தில் அரச பல்கலைக்கழக தெரிவு கிடைக்காத மாணவர்ககளுக்கு மருத்துவக் கல்லூரி (medical college), பொறியியல் கல்லூரி (engineering college), இலத்திரனியல் கல்லூரி (electronic college), முகாமைத்துவ கல்லூரி (management college), என அமைத்து பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
சாதாரணதரம், உயர்தரத்திலிருந்து விடுபட்டு செல்லும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுதல், எங்காவது பாதுகாப்பு (security) வேலை செய்தல் போன்ற தரத்தில் குறைந்த தொழில்களுக்கு செல்வதனை தடுக்க முடியும்.
இலங்கையில் இயங்கி வரும் 7 வைத்திய பீடங்களுக்கும் அரசால் ஒதுக்கப்படும் நிதியுதவி, கருவிகள், பயிற்சிகள், மிகவும் குறைவு. சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகளையளிக்க பல்கலைக்கழங்களுக்கு வசதிகள் இல்லையென்றே கூறலாம். இன்னும் நவீன ஏற்பாடுகள் தாமதமாகவே நடைபெறுகின்றன. சில பட்டப்பின் விஷேட கல்வியைப் பெறும் நிலை எமது பீடங்களில் இல்லை. அவற்றைப் பெற இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைக்கழகங்களை நாடிச் செல்லும் நிலை தொடர்கிறது.
2016 பெப்ரவரி 14 ஆம் திகதி ஆரம்பித்து பல நாட்களாக பேராதெனிய பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்கள் 300 பேர் வகுப்பை பகிஷ்கரித்து வந்தனர். இவர்களின் இப்பகிஷ்கரிப்புக்கு காரணம் இறுதி ஆண்டு மாணவர்கள் மேற்கொள்ளும் பகிடிவதையை எதிர்ப்பதே. இப்படியான ஒழுக்கமற்ற சூழ்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி கற்க வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. பகிடிவதைச் சட்ட ஏற்பாடுகள் அமுலில் இருத்தாலும், சட்டத்தின் கண்களுக்குத் தெரியாமல் அவையும் நடந்தே வருகின்றன.
கடந்த 30 வருடத்துக்குள் சர்வதேச புலமைவாதிகளின் கவனத்தை ஈர்க்கக் கூடிய தரத்தில் எந்தவித ஆய்வுகளோ (research) விஞ்ஞான கண்டுபிடிப்புக்களோ (scientific inventions) இலங்கை பல்கலைகழங்களிலிருந்து சர்வதேசத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் மிக தாழ்ந்த நிலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2013/2014 உலக பல்கலைக்கழக தரப்படுத்தல்
-------------------------------------------------
* மொரட்டுவ பல்கலைக்கழகம் 2150 ஆவது இடத்தில்,

* கொழும்பு பல்கலைக்கழகம் 2255 ஆவது இடத்தில்,
* ருகுனு பல்கலைக்கழகம் 2353 ஆவது இடத்தில்,
* பேராதெனிய பல்கலைக்கழகம் 2973 ஆவது இடத்தில்,
மிகவும் குறைந்த படிப்பறிவு வீதம் உள்ள ஆபிரிக்கா நாடுகளின் பல்கலைக்கழங்கள் எம்மை விட மிகவும் முன்னிலையில் இருக்கின்றன என்பது வியப்பாக உள்ளது.
* நமீபியா பொலிடெக்னிக் 1319 ஆவது இடத்தில்,
* சூடானின் கார்டூம் பல்கலைக்கழகம் 1394 ஆவது இடத்தில்
* எத்தியோப்பியாவின் அட்ஸ்அபாபா பல்கலைக்கழகம் 1903 ஆவது இடத்தில்.
* உகன்டாவின் மகராரே பல்கலைக்கழகம் 1174 ஆவது இடத்தில்.
மேற்கூறியவாறு பல்கலைக்கழங்களுடன் போட்டி போட்டு தரப்படுத்த அரசிடம் போதிய நிதிவசதி இல்லை என்பதை எம்மால் ஏற்க முடியாது. அரசு பல வழிகளில் அதற்கான நிதியை நியாயமான முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
சம்பவம்
---------------
அண்மையில் பேராதனை அரச வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்றின் வலது காலில் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சையை ஒரு வைத்தியர் இடது காலில் செய்து அக்குழந்தையை ஆபத்தில் தள்ளினார்.

இத்தவறுக்காக நாட்டின் அனைத்து வைத்தியர்களையும் குறிப்பிட்ட தவறை இழைத்த வைத்தியர் படித்த பல்கலைக்கழகத்தையும் குறை கூறுவதிலும் திட்டித்தீர்ப்பதும் நியாமாகாது.
அது போல் தான் தனியார் வைத்திய கல்லூரிகள் வந்தால் தரமில்லாத வைத்தியர்கள் உருவாவார்கள் என்னும் வாதமும் எந்த அடிப்படையும் அற்றதே. தரம் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு.
அதனை விட்டுவிட்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து அதிகம் Z- Score எடுத்தால் தான் வைத்தியராகலாம் என்றெல்லாம் சட்டம் போடுவது. திறமையான பல மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியே.
தனியார் வைத்திய கல்லூரிகளை அனுமதிக்காதது பல பணக்கார மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனை தனியார் கையில் கொடுக்காமல் வசதியான மாணவர்களிடம் பணம் பெற்றாவது அரசு அதைச் செய்யலாம். இந்த வாய்ப்பை மாணவர்களுக்கு உள்நாட்டிலே கொடுக்க முயற்சிக்க வேண்டும். வெளிநாடுகளில் பல நாடுகள் இந்த வழிமுறையை பயன்படுத்தியே அரச பல்கலைக்கழங்களில் வாய்ப்பு கிடைக்காத கல்வியில் ஆர்வம் மிகுந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
எதையும் பொதுவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் அரசை ஒருதலைப் பட்சமாக எதிர்ப்பதும், அரசு மாணவர் நலனை மீறி இலாபம் தரும் முதலீடாக மட்டும் பல்கலைக்கழக கல்வியை நோக்குவதும் கல்வியில் ஆரோக்கியமான நிலைமையாகாது. எதுவானாலும் எமது நாட்டில் இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் இன்னும் விரிவாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவே உண்மையான கல்வி வளர்ச்சியும் ஆகும்.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்