அமெரிக்காவின் ஓரின நைட் கிளப்பில் நேற்றிரவு 50 பேர் உயிரிழந்த தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் உமர் மதீன் (SWAT டீமால் கொல்லப் பட்டார்) ஒரு மனநோயாளி என அவரின் முன்னாள் மனைவி சிடோரா யுசிபியா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
2009 இல் அவரை திருமணம் முடித்த யுசிபியா, நான்கு மாதங்களே அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் விவாகரத்துப் பெற்றுள்ளார். ஒன்லைன் மூலமே இவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
திருமணம் செய்த ஆரம்ப கட்டத்தில் அவர் என்னுடன் சிறந்த முறையில் வாழ்க்கை நடாத்தினார். நகைச்சுவையாக பேசி, சிரித்து சந்தோசமாக இருந்தோம்.
பின்னர், சில நாட்களில் அவரில் பல மாற்றங்களைப் பார்த்தேன். பைத்தியம் பிடித்தவர் போன்று நடந்துகொண்டார். பின்னர் தான் நான் எனது பாதுகாப்பு தொடர்பில் முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன் எனவும் மதீனின் முன்னாள் மனைவி கூறியுள்ளார்.
கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக அவருடன் எந்தத் தொடர்பும் தனக்கு இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை இஸ்லாத்துடனும், ஐ.எஸ். உடனும் சில ஊடகங்கள்  தொடர்புபடுத்துவதற்கு முயற்சிப்பதை நான் கேட்டேன். இது நடுநிலையற்ற ஒரு அம்சம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 

 




 
