தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த மக்களும், பௌத்த குருமாரும் முஸ்லிம்களுடன் சமாதானமாக சகவாழ்வுடனே வாழவிரும்புகிறார்கள்.
பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதனையே விரும்புகிறார்கள். ஆனால் பள்ளிவாசல் விவகாரத்தை முஸ்லிம் மற்றும் பௌத்த அடிப்படைவாதிகளே பெரிதுபடுத்தி பிரச்சினைக்குள்ளாக்கியிருக்கின்றனர் என ஜாதிக சங்க சம்மேளனத்தின் செயலாளர் ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'தேரரே பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளுக்கு உங்கள் தலைமையிலான குழுவினரே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் விஸ்தரிப்பு பணியினை நிறுத்தும்படி வேண்டிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறதே என்று 'விடிவெள்ளி' வினவியதற்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், '
நான் அவ்வாறான குழுவொன்றுக்கு தலைமை வகித்ததாக கூறுவது தவறாகும். நான் தலைமை வகிக்கவில்லை. நாம் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
பள்ளிவாசல் நிர்வாகிகளும் அப்பிரதேச மக்களும் மற்றும் பௌத்த குருமார்களும் சமாதானமாக இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சிகளைச் செய்தோம்.
பெளத்தர்கள் பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்கள் பன்சலைக்கும் சென்று பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்காண திட்டமிட்டிருந்தோம். ஆனால் பள்ளிவாசல்கள் தொடர்பான அமைப்பைச் சேர்ந்த குழுவினரால் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது.
பௌத்தர்களும் பௌத்த குருமாரும் சமாதானத்தையே விரும்புகிறார்கள். பிரச்சினைகளைக் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் நாம். பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். என்றாலும் நாம் சகவாழ்வையே விரும்புகிறோம்.
பன்சலைகளுக்கு அருகில் தான் பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. என்றாலும் நாம் புரிந்துணர்வுடன் சகவாழ்வு வாழ்வது அவசியமாகும். என்றார்.




