Post views-

முஸ்லிம் சமூகம் பண்பாட்டை மீழமைக்க வேண்டிய தருணம்?

வரலாறு தொட்டு நாம் இந்த நாட்டிலே வாழ்கிறோம். எமக்கென்று பண்பாடும், கலாசார மரபும் உண்டு.
பண்பாடுகளுக்கிடையில் ஒற்றுமையும், தொடர்பும் இந்த நாட்டிலே தொன்மை முதல் நிலவி வரும் ஒரு சிறப்பியல்பாகும். பல இன மக்கள் ஒன்றாக வாழும் இந்த நாட்டிலே எல்லாப் பண்பாடுகளுக்கிடையிலான கலாசார உறவுத் தன்மை (cultural relativism) இங்கே சிறப்பாகவே உள்ளது. ஏதாவதொரு பண்பாட்டை, நாகரீகத்தை உயர்ந்தது என்றும், மற்றையதைத் தாழ்ந்தது என்றும் கூறுமளவு அனைத்து கலாசாரங்களையும் கடந்த பொதுக் கூறுகள் (culture - free means) இங்கே இன்னும் உருவாகி விட வில்லை. எல்லோரும் அவரவர் பண்பாட்டில் தன்னளவில் உயர்ந்தவர்கள் என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர் பண்பாட்டிற்குப் பங்கம் விளைவிக்காது.
அண்மைக் காலம் முதல் எமது நாட்டின் சில பௌத்த குழுக்களின் செயற்பாடுகளால் சகவாழ்வில் விரிசல்கள் தொடர்கின்றன. ஆங்காங்கே மத நல்லுறவில் குழப்பம் ஏற்படுகின்றன. தங்களின் இயல்பான பண்பாடே மேலானது (genuine culture) என்றும், அடுத்த பண்பாடு, பண்பாட்டு மூல நூல் என்பனவும், பண்பாட்டின் தந்தையையும் (முஹம்மத் (ஸல்) அவர்கள்) பகிரங்கமாகவே கேலிக்குட்படுத்தி வந்தார்கள்.
இவற்றுக்குள் அரசியல் மறைகரங்கள் செயற்பட்டாலும், எமது திறத்தாரின், தூரநோக்கற்ற செயற்பாடுகளும் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
நபியவர்கள் எமக்கு பண்பாட்டை விட வேறு எதைக் கற்றுத் தந்தார்கள். உலகமே பண்பாடற்வர்கள் என வெறுத்து ஒதுக்கிய "ஜாஹிலிய" சமூகத்தை பண்பாட்டின் மூலம் அல்லவா நபியவர்கள் சீர் செய்தார்கள். ஏன் எமக்கு பிடிவாதம், தூரநோக்கற்ற போக்கு, எடுத்த எடுப்பிலே முரண்டுபிடித்தல். அவர்களுக்குச் சமமாக நாமும் சண்டைக்குத் தயாராக வேண்டுமா?
பௌத்த மக்களில் ஒரு சாரார் இந்த நாட்டிலே இயல்பாகவே தற்பெருமை உணர்வுடையவர்கள் (megalomanical), தன்னலப் போக்குடையவர்கள்(egotistic) அவர்கள் ஆழக்கூடிய பண்பாட்டை உடையவர்கள் என்றும், அடுத்த பண்பாடுகள் அடங்கி, ஒடுங்கி, இசைந்து போதலை (apollonian) மட்டுமே பணியாகக் கொண்டு வாழ வேண்டும் என்றும், தவறாக நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாடு பௌத்த பண்பாடு என்றும் எழுதி வைத்திருப்கிறார்கள். மற்றைய பண்பாடுகளின் வளர்ச்சியால் பௌத்த பண்பாடு அழிந்து அல்லது குறைந்து போய்விடும் என்பது அவர்களின் எண்ணமாக உள்ளது. இதே எண்ணம் மதகுருமாரூடாக வெளியாகி, அரசியல் உயர் பீடங்கள் வரை கூட தாவிச் சென்று கடைப்பிடிக்கின்றன.
இவ்வாறான பின்புலத்திலே வாழும் எமக்கும் சில பொறுப்புக்கள் இருக்கின்றன. அவை சரியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

சம்பவம் - 1
சம்மாந்துறையிலே தனியார் வைத்தியசாலைக்கு மிக அண்மையில் பள்ளிவாசல் உள்ளது. VOG நோயாளியைப் பார்வையிடும் நேரம் பள்ளியிலே ஒலிபெருக்கியைப் பாவித்து தொழுகை நடைபெறுகிறது.

இது VOG க்கு பணி செய்ய கடினமாக உள்ளதாக பள்ளிவாசல் நிருவாகத்திடம் முறையிட்டால் அவர்கள் அதைக் கணக்கிலெடுக்காது தொழுகை அள்ளாஹ்வின் பணி எனத் தொடர்ந்து ஒலிபெருக்கியிலே தொழுகையை நடாத்திச் செல்கிறார்கள். சிக்கல் தொடர்கிறது.

சம்பவம் - 2
கண்டி லைன் பள்ளிவாசல் பிரச்சினை. மினாராவை தலதா மாளிகையை விட உயர்த்தி அமைக்க எத்தணித்தல். அல்லது நாம் அமைத்த மினாராவை அவர்கள் தலதாவை விட உயரமாக உள்ளது எனக் கதை விடல்.

மினாராவை சிறியதாக அமைப்பதில் எமக்குள்ள இஸ்லாமியப் பிரச்சினை என்ன. நாம் ஒரு இன மோதலை, பிரச்சினையை உருவாக்காது தவிர்க்கும் வழிகளை அல்லவா கையாள வேண்டும். பிரச்சினை தொடர்கிறது.

சம்பவம் - 3
கொல்பிட்டி, தெஹிவளை, பம்பலப்பிட்டி, அதேபோல் கொழும்பிலும் நாட்டின் முக்கிய நகரங்கிளிலும் பல பள்ளிகளில் ஜும்ஆ தொழுகையின் போது வாகனங்களும், சனங்களும் பாதையால் நிரம்பி வழிதல்.

இங்கு பள்ளிக்கு மிக அண்மையில் உள்ளவர்களும் தங்களின் "இன்டகூலரை" எடுத்துக் கொண்டு வந்து பள்ளி வழாகத்துக்குள் போட்டு நிரப்பிவிட வேண்டுமா? வாகன நெரிசல், பிரச்சினை தொடர்கிறது.

சம்பவம் - 4
நோன்பு காலத்தில் கொழும்பு போன்ற நகர்ப் பகுதியில் சஹர், இப்தார், தராவீஹ் நேரங்களில் பக்கத்து வீட்டு அந்நிய சகோதரக் குடும்பத்தின் தூக்கத்தையும், சுதந்திரத்தையும் கெடுப்பதும், அவர்களின் கோபத்தை சம்பாதிப்பதும்.

இந்த நாட்டின் அரசியலமைப்பு முறைமையினூடாக எமக்கான உரிமைகள் உண்டு. ஆனாலும் நாம் சில விடயங்களில் மிகவும் நிதானமாக யோசிக்க வேண்டும். எமது மத விழிப்புணர்வு போல், அவர்களின் மதங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டே வருகிறது. "பௌத்த தர்மமும் பொருளாதாரமும்" "பௌத்தத்தில் சமூகவியல்" என்று புதிதாக நூல்களெல்லாம் வந்தவண்ணம் உள்ளன.
நாம் எமது எதிர்காலம் சரியாக அமையவும், சந்ததி சிறப்பாக வாழவும் திட்டமிட வேண்டும். இரத்தக் கொதிப்பும், கொந்தளிப்பும் எமக்கு நெடுகிலும் ஆகாது.
தெளிவு எதிலும் வேண்டும். புத்திசாலித்தனமான முடிவு எமது இருப்புக்கு உரம் அல்லவா?
இஸ்லாமிய புத்திஜீவிகளே கவனம் எடுங்கள். ஒரு சிறந்த வழியைச் சொல்லுங்கள். இந்த நாட்டிலே எமது பண்பாட்டை மீழமையுங்கள். எமது சந்ததி வாழ வழி சமையுங்கள். நமது தீர்மானம் நீடித்து நிலைத்த சமூகத்தை உருவாக்க வேண்டும். ஒரு தீர்க்கமான கலந்துரையாடலைச் செய்வோம். எமது கலாசார மரபை கரைத்துவிடாது அடுத்தவர் பண்பாட்டுடன் கலந்து வாழும் உறுதியை நமது திறத்தில் ஏற்படுத்த உழைப்போம்.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in English.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்